வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடி வந்த விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இன்று அறிவித்துள்ளனர். ஓராண்டாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி? என்பதை விரிவாக பார்ப்போம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தலைநகரில் விவசாயிகள் ஒன்றுகூடினர். வீரியத்துடன் தொடங்கிய அவரது போராட்டம் ஓராண்டை கடந்தும் தொடர்ந்தது. அண்மையில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, மத்திய அரசின் இந்த உறுதி ஒருபுறம் இருந்தாலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்த பின்னரே, போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் உறுதியாக இருந்தனர். இதனால், குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்பட்ட நிலையில், டெல்லியில் எல்லைகளில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும், எம்.எஸ்.பி.க்கு தனிச்சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவித்தன. இது மத்திய அரசுக்கு புதிய தலைவலியாக இருந்தது. தொடர்ந்து, போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விவசாய சங்க தலைவர் குர்னாம் சிங் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு டெல்லியில் நேற்று ஒன்றுகூடி போராட்டத்தை முடிவுக்கு வரப்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆனால் இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. மேலும் போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டு மத்திய அரசுக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் கடிதமும் எழுதினர். இதனடிப்படையில் மத்திய அரசு சார்பில் இன்று விவசாய சங்கங்களுக்கு இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், விவசாயிகள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்பப்பெறபடுவதாகவும் எம்.எஸ்.பி. தொடர்பாக ஆலோசிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்து உறுதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் டெல்லி-ஹரியானா எல்லையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க தலைவர்கள் மத்திய அரசின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு, விவசாய போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுவதால், நாளை மறுநாள் எல்லைகளில் போராட்டத்தை முழுமையாக முடித்துக்கொண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா புறப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வருகிற 13-ஆம் தேதி தங்களுடைய வெற்றிகளை கொண்டாடும் வகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருக்கக்கூடிய பொற்கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 15-ஆம் தேதி ஒன்று கூடி மீண்டும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மத்திய அரசு அறிவித்தபடி தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்குவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பைத்தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய கூடாரங்களை அகற்றிவிட்டு ஒரு சிலர் இன்றே தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். சிங்கு, டிக்ரி, காசிப்பூர் பகுதிகளை போராடிவரும் விவசாயிகள் ஆடல், பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த வெற்றி நேரத்தில் உயிரிழந்த விவசாயிகளின் தியாகத்தை நினைவு கூறுவோம் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பல்வேறு கட்சிகளும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளனர்.
http://dlvr.it/SF3S13
Thursday, 9 December 2021
Home »
» போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்த விவசாயிகள் - வேளாண் சட்டம் வாபஸ்க்கு பிறகு நடந்தது என்ன?