திருமணத் தகவல் இணைய தளங்களில் கிடைக்கும் தகவல்களை எடுத்து பெண்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. மும்பை அருகிலுள்ள கல்யாண் என்ற இடத்தைச் சேர்ந்த 35 வயது பெண் திருமணத்துக்காக, தனது தகவல்களைத் திருமணத் தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதைப் பார்த்த ஆதித்யா மாத்ரே என்பவர் 35 வயது பெண்ணுடன் தொடர்புகொண்டு பேசினார். தான் இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாகத் தெரிவித்தார். அதோடு தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் ஆசைவார்த்தை கூறினார். அந்தப் பெண்ணும் அவரை நம்பினார். அடிக்கடி அவர்கள் போனில் பேசிக்கொண்டனர். ஒருகட்டத்தில் தனக்கு சிறிய பணப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்து உதவினால் திருப்பிக் கொடுத்துவிடுவதாக ஆதித்யா அந்தப் பெண்ணிடம் தெரிவித்தார். அவரும்ம் தனது திருமணம் மற்றும் எதிர்காலத்துக்காகச் சேமித்துவைத்திருந்த 14.36 லட்சத்தை மாத்ரேயிடம் கொடுத்தார்.மோசடி
ஆனால் மாத்ரே அதோடு நிறுத்தாமல் மேலும் 25 லட்சம் கேட்டார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் தனது பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அதன் பிறகு அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து மாத்ரேயைத் தேடிவந்தனர். மாத்ரே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டேயிருந்தார். இதனால் போலீஸாருக்கு அவரைக் கைதுசெய்வது சிரமமாக இருந்தது. எனினும், அவரின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். கடைசியாக திருமண தகவல் இணையதளத்தில் கிடைத்த ஒரு பெண்ணிடம் திருமணம் குறித்துப் பேசுவதற்காக அவர் நவிமும்பை செல்லவிருப்பது தெரியவந்தது.
உடனே போலீஸார் மாத்ரேயை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் நவுஸ் மாத்ரே, தன்மே மாத்ரே, ஆதித்ய மாத்ரே என வேறு வேறு பெயர்களில் பெண்களிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பண மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்துவரும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்திருக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே குறிவைத்து ஆதித்யா மாத்ரே செயல்பட்டுள்ளார். அந்தப் பெண்களிடம், தான் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசாவில் விஞ்ஞானி என்று கூறி வேறு வேறு பெயர்களில் அறிமுகம் செய்துகொள்வார். கைது
ஒரு பெண்ணின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு அந்தப் பெண்ணிடம் தனக்குத் தொழிலில் பிரச்னை அல்லது வேறு ஏதாவது பிரச்னை என்று கூறி பணம் கேட்பது அவர் வழக்கம். அப்படிப் பணம் கைக்கு வந்தவுடன் வேறு பெண்களைத் தேடிச் சென்றுவிடுவார். வேலையில்லாமல் இருக்கும் ஆதித்யாவுக்கு இதுதான் முழுநேர வேலை. ஆதித்யா எல்லோரிடமும் தனக்குத் திருமணமாகவில்லை என்று தெரிவித்துவந்தார். ஆனால் அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். மும்பை, கல்யாண், ராய்கட், தானே போன்ற பகுதியில் இதுவரை 15 பெண்களிடம் இது போன்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக அவர் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்திலும் தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
http://dlvr.it/SH97qx
Saturday, 15 January 2022
Home »
» 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் டார்கெட்! - நாசா விஞ்ஞானி என 14 பெண்களிடம் திருமணம் செய்வதாகப் பண மோசடி