மும்பை அருகே போலி டாக்டர்கள் சிலர் கிளினிக் நடத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து `மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் அனைத்து மருத்துவமனை டாக்டர்களும் தங்களது பதிவு எண், படித்த சான்றுகளைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அனைத்து மருத்துவமனை டாக்டர்களும் தங்களின் சான்று நகல்களை தாக்கல் செய்துவிட்ட நிலையில், எலும்பு சிகிச்சை நிபுணர் ஹேமந்த் பாட்டீல் என்பவர் மட்டும் தொடர்ந்து ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துவந்தார். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வசந்த் பாட்டீல், தனது ஊழியரை அனுப்பி ஹேமந்த் பாட்டீலிடம் நேரடியாக நோட்டீஸ் கொடுக்கச் செய்தார். மும்பை மாநகராட்சி
அப்படியிருந்தும் ஹேமந்த் பாட்டீல் ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து ஹேமந்த் பாட்டீல்மீது, டாக்டர் வசந்த் பாட்டீல் போலீஸில் புகார் செய்தார். புகார் செய்யப்பட்டதையடுத்து ஹேமந்த் பாட்டீல் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவந்தனர். அவரோ அடிக்கடி தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். போலீஸாரும் அவரது இருப்பிடத்தைத் தொடர்ந்து கண்காணித்து இறுதியில் தானேயில் கைதுசெய்தனர்.
மசாலா சேல்ஸ்மேன் டாக்டரானது எப்படி?
ஹேமந்த்திடம் விசாரணை நடத்திய வசாய்ரோடு மூத்த இன்ஸ்பெக்டர் கல்யாண் ராவ் இது குறித்துக் கூறுகையில், ``ஹேமந்த் பாட்டீல் முதலில் மசாலா பொருள்கள் உற்பத்தி செய்யும் கம்பெனியில் சேல்ஸ்மேனாகச் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு எலும்பு சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்களை சப்ளை செய்யும் கம்பெனி ஒன்றிலும் சேல்ஸ்மேனாக வேலை செய்தார். இதில் மகாராஷ்டிரா முழுக்கச் சென்று வந்தார். அதில் கிடைத்த அனுபவங்களைக்கொண்டு நாமே ஏன் எலும்பு சிகிச்சை செய்யும் கிளினிக் தொடங்கக் கூடாது என்று நினைத்தார்.
ஆனால் இதற்கு சான்றிதழ் வேண்டும் என்று நினைத்த ஹேமந்த் பரோடாவிலிருந்து போலிச் சான்றிதழ் வாங்கி வந்து 2018-ம் ஆண்டு கிளினிக் நடத்தினார். அவர் பலருக்கு ஆபரேஷனும் செய்துள்ளார். அவர் ஆபரேஷன் செய்த பலர் நடக்க முடியாமல் படித்த படுக்கையாக இருக்கின்றனர்” என்றார்.
ஆபரேஷன் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மாநகராட்சி முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுனில் வட்கரிடமிருந்து கற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார். அதோடு ஹேமந்த் பாட்டீல் பல மருத்துவமனைகளுக்குப் பகுதி நேரமாகவும் சென்று சிகிச்சையளித்துள்ளார். கைது
திருமணத்திலும் மோசடி?
ஹேமந்த் பாட்டீலிடம் விசாரித்தபோது இதுவரை ஐந்து பெண்களைத் திருமணம் செய்து மோசடி செய்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் தான் ஓர் எலும்பு சிகிச்சை நிபுணர் என்று கூறி அமராவதியைச் சேர்ந்த பல் டாக்டர் ஒருவரைத் திருமணம் செய்தார். ஆனால் அந்தப் பெண் டாக்டர், ஹேமந்த் உண்மையில் டாக்டர் இல்லை என்று தெரிந்தவுடன் அவர்மீது மோசடி வழக்கு பதிவுசெய்தார். இவ்வழக்கில் ஹேமந்த் கைதுசெய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் தனது இடத்தை மாற்றிக்கொண்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு கிளினிக் நடத்த ஆரம்பித்தார். அவர் இதுவரை மொத்தம் ஐந்து பெண்களை திருமணம் செய்திருப்பதாக கூறும் போலீஸார், அவரது பெயரை மேட்ரிமோனியல் தளத்தில் இன்னும் பதிவு செய்துவைத்திருப்பதாகத் தெரிவித்தனர். தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், தனது ஆண்டு வருமானம் 10 லட்சம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
http://dlvr.it/SH2l8l
Thursday, 13 January 2022
Home »
» சேல்ஸ்மேன் டு போலி மருத்துவர்; 5 பெண்களுடன் திருமணம்! - மும்பையில் மோசடி நபர் சிக்கியது எப்படி?!