கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது தொடரப்பட்ட வழக்கில் கடந்த 14-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் பிஷப் விடுவிக்கப்படுவதாக கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜி.கோபகுமார் தீர்ப்பு வழங்கினார். பிஷப் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்திய சபையைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு கேரளத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. அந்த வழக்கு, தீர்ப்பு, அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் இங்கே... நடிகைகள் ஷேர் செய்த கன்னியாஸ்த்ரீ போராட்ட புகைப்படம்
Also Read: கன்னியாஸ்த்ரீ பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசு - விடுவிக்கப்பட்டார் பிஷப்!
கோட்டயம் குருவிலங்காடு மடத்தில் பார்வையாளராகச் சென்ற ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. 2014 முதல் 2016 வரை, தான் 13 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்ததால் சீரோ மலபார் சபையின் உயர்ந்த பீடத்தில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்தனர். ஆரம்பத்தில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது நடவடிக்கை எடுக்க சபை தயங்கியது. சக கன்னியாஸ்திரிகள் போராட்டங்களை முன்னெடுத்ததால் சபை வேறு வழியின்றி இறங்கிவந்தது. மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய, 2018 செப்டம்பர் 21-ம் தேதி பிஷப் பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள சில வரிகள், காவல்துறையின் பலவீனமான விசாரணை குறித்து சுட்டியுள்ளது. ``மடத்தில் 20-ம் எண் கொண்ட அறையில் வைத்து கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்கிறார்கள். அப்போது, கன்னியாஸ்திரி எதிர்த்துப் போராடவும் செய்திருக்கிறார். அது பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குத் தெரியவில்லை என்பது முரணாக இருக்கிறது. கன்னியாஸ்திரி இருந்த அறைக்கு ஜன்னல்கள் உண்டு. ஆனால் பக்கத்து அறைகளில் யாரும் இல்லை என அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. கன்னியாஸ்திரியின் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை வாங்கி போலீஸார் பரிசோதிக்கவில்லை. இது போலீஸாரின் தோல்வி'' என கோர்ட் விமர்சித்துள்ளது. இதற்கிடையே, ``இது எதிர்பார்க்காத தீர்ப்பு'' என அரசு வழக்கறிஞர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும் உயர் நீதிமன்றத்துக்கு அப்பீலுக்குச் செல்வதாகவும் அரசுத் தரப்பு அறிவித்துள்ளது.பிஷப் பிராங்கோ முல்லக்கல்
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிஷப் பிராங்கோ முல்லக்கல், ``தெய்வத்தின் கோர்ட்டில் உள்ள தீர்ப்பு, பூமியில் உள்ள கோர்ட்டிலும் வரட்டும் என நான் பிரார்த்தித்தேன். தெய்வம் உண்டு என்றும், தெய்வத்தின் சக்தி என்னவென்றும் உலகத்துக்கு காட்டிக்கொடுக்கும் மிஷனரி நான்.
அதற்கு ஒரு வாய்ப்பு இது. பிரார்த்தனைக்கு சக்தி உண்டு என ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் புரிந்துள்ளது. சத்தியத்தை நேசிப்பவர்களும், சத்தியத்தின் பக்கத்தில் நிற்பவர்களும் என்னுடன் இருந்தார்கள். பழம் காய்க்கும் மரத்தில் கல்லெறி விழும். தொடர்ந்து பிரார்த்தியுங்கள், தெய்வத்தை துதியுங்கள் என்று சபையினரை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.பார்வதி
Also Read: `ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயன்றார்!' -பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது மற்றொரு பாலியல் புகார்
இந்த விவகாரத்தில் பிஷப்புக்கு எதிராகவும், கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும் மலையாள நடிகைகள் களத்தில் இறங்கியுள்ளனர். நடிகை ரீமா கல்லிங்கல் தனது சமூக வலைதளத்தில் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தும் புகைப்படத்தை பகிர்ந்து, ``அவருடன் என்றும்" எனப் பதிவிட்டுள்ளார்.
``இந்தத் தீர்ப்பு மிகவும் கொடூரமானது. நாங்கள் பின்வாங்கமாட்டோம். எது எங்களை தோற்கடித்தாலும் நாங்கள் பின்வாங்கமாட்டோம். இதயம் உடைகிறது" என உருக்கமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி திருவோத்து.
கேரளாவையே உலுக்கிய இந்த வழக்கின் தீர்ப்பு, கேரளா தாண்டியும் சட்ட மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர்களிடம் விவாதமாகத் தொடர்ந்து வருகிறது.
http://dlvr.it/SHG5MR
Monday, 17 January 2022
Home »
» `இதயம் உடைகிறது!' - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு தீர்ப்பால் கொதிக்கும் மக்கள்; என்ன நடந்தது?