கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில், சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யூ ஆகியவை நேரடியாக மோதின. கடந்த 10-ம் தேதி தேர்தல் நடந்த சமயத்தில் எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கே.எஸ்.யூ மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தீரஜ், அபிஜித், அமல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீரஜ் மற்றும் மற்றொரு மாணவருக்கு கத்தி குத்து விழுந்தது. மூன்றுபேரும் இடுக்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீரஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இரண்டு மாணவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணூரைச் சேர்ந்த தீரஜின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.தீரஜ் இறுதிச்சடங்கில்
எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த தீரஜ் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்ணூர், கோழிக்கோடு பகுதிகளில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. திருவனந்தபுரத்தில் எஸ்.எஃப்.ஐ, கே.எஸ்.யூ மாணவர் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், ``மாணவன் தீரஜ் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் துக்ககரமானது. கல்லூரியில் கலவரம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. தீரஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என கூறியிருந்தார்.
தீரஜின் உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில் அவரின் மார்பு பகுதியில் மட்டுமே கத்தியால் குத்தப்பட்ட காயம் உள்ளதாகவும், இதயத்தில் கத்திப்பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த நிகில் பைலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்களுக்கு என்ன வேலை என எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் கேள்வி எழுப்பியதால் முதலில் பிரச்னை தொடங்கியுள்ளது.கொலை செய்யப்பட்ட எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர் தீரஜ்
இதைத்தொடர்ந்து கல்லூரி நுழைவு வாயிலில் வைத்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. தீரஜ் உள்ளிட்டவர்களை கத்தியால் குத்திவிட்டு ஓடி தப்பியதாகவும், ஓடும்போதே நிகில் பைலி கத்தியை வீசிவிட்டு வழியில் சென்று உடை மாற்றி பஸ்ஸில் ஏறிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சில பிரச்னைகள் காரணமாக கையில் எப்போதும் கத்தி வைத்திருந்ததாக நிகில் பைலி போலீஸிடம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மேலும் இருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
http://dlvr.it/SGynrl
Wednesday, 12 January 2022
Home »
» கேரளா: மாணவரின் இதயத்தில் பாய்ந்த கத்தி... கொலையில் முடிந்த எஸ்.எஃப்.ஐ - கே.எஸ்.யூ மாணவர் சங்க மோதல்