1998, 1999 என அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. 1998 தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் 58 மக்களவைத் தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. அங்கு, 1999-ல் பா.ஜ.க-வின் பலம் 29-ஆகச் சுருங்கியது. 1999 நாடாளுமன்றத் தேர்தலின்போது, உ.பி முதல்வராக கல்யாண் சிங் இருந்தார். பின்னர், கல்யாண் சிங் ஓரங்கட்டப்பட்டு, ராம் பிரகாஷ் குப்தா முதல்வராக அமர்ந்தார். பா.ஜ.க-விலிருந்து கல்யாண் சிங் வெளியேறினார். அதனால், ஓ.பி.சி சமூகத்தினர் மத்தியில் பா.ஜ.க-வின் செல்வாக்கு சரிந்தது. கல்யாண் சிங்
ராம் பிரகாஷ் குப்தா முதல்வர் பதவியில் அமர்ந்த சில மாதங்களில், அவருக்கு எதிராகப் புரளிகள் கிளப்பிவிடப்பட்டன. பா.ஜ.க-வுக்கு உள்ளிருந்தே அந்தப் புரளிகள் கிளப்பப்பட்டதாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக, ராம் பிரகாஷ் குப்தாவுக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும், அமைச்சர்களைக்கூட அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்றும் கிளப்பிவிடப்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து குப்தா விலகினார். 2000-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், அப்போதைய மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவருமான ராஜ்நாத் சிங் உ.பி முதல்வரானார்.
உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவிவகித்த 18 மாதங்களில், சாதியரீதியில் பா.ஜ.க பக்கம் ஆதரவாளர்களைத் திரட்ட ராஜ்நாத் சிங் சில வேலைகளைச் செய்தார். ஓ.பி.சி வகுப்பினரைப் பிரிப்பதற்கு ஹுகும் சிங் தலைமையில் ஒரு கமிட்டியை உருவாக்கினார். உ.பி-யில் யாதவர்களைவிட ஜாட் சமூகத்தினரே மிகவும் பின்தங்கியிருப்பதாக அந்த கமிட்டியின் பரிந்துரையில் சொல்லப்பட்டது. கிராம அளவில் அடிக்கடிப் பயணங்கள் மேற்கொண்டு விவசாயிகளை அவர் சந்தித்தார். ராஜ்நாத் சிங்
ஆனாலும், 2002-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரால் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை. அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பா.ஜ.க., வெறும் 88 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்துக்குச் சென்றது. அதையடுத்து, டெல்லிக்கு மூட்டையைக் கட்டிய ராஜ்நாத் சிங், அங்கு சென்று பா.ஜ.க பொதுச்செயலாளராகவும், பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகவும் ஆகிவிட்டார். உ.பி-யில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
2002-ம் ஆண்டு, மார்ச் 8 முதல் மே 3 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. பிறகு, பா.ஜ.க ஆதரவுடன் முதல்வராகும் வாய்ப்பு மாயாவதிக்குக் கிடைத்தது. முதல்வராக அமர்ந்த மாயாவதி, தன் அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். அப்போது, அமைச்சர் பதவியை எதிர்பார்த்த பலரும் ஏமாந்துபோனார்கள். அவர்கள் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதனால், மாயாவதி அரசுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்தது. அந்தச் சூழலில், தனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா என்று சமாஜ்வாடி கட்சி காத்திருந்தது. முலாயம் சிங் யாதவ்
அதிருப்தி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், 2002-ம் ஆண்டு, அக்டோபர் 31-ம் தேதி, ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரியைச் சந்தித்து மாயாவதி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தனர். மறுநாளான நவம்பர் 1-ம் தேதி சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர் சிங் 165 எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரைச் சந்தித்தார். தங்களுக்கு 204 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் அவர் தெரிவித்தார். அமர் சிங் அளித்த பட்டியலில் 37 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மாயாவதி அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று கவர்னரை அமர்சிங் வலியுறுத்தினார்.
தம்மை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் திடீரென்று அழைக்கலாம் என்று எதிர்பார்த்த முலாயம் சிங் யாதவ், போதுமான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தமக்கு இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவர் ஆதரவு கோரினார். ஆனால், சோனியாவிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை.
சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டுமாறு ஆளுநர் கோருவார் என்ற எதிர்பார்ப்பும் முலாயமுக்கு இருந்தது. சிறப்புக்ப்கூட்டம் நடைபெற்றால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மாயாவதி அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று முலாயம் கணக்கு போடுகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சிக்கு எதிராகப் புகார்களை அடுக்கினர். மாயாவதி
இதுபோல, அடுத்தடுத்து பல சம்பவங்கள் அரங்கேறியதைத் தொடர்ந்து, 2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வர் பதவியை மாயாவதி ராஜினாமா செய்தார். மாயாவதி ஆட்சிக்கு எதிரான அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் முதல்வர் நாற்காலியைப் பிடித்தார் முலாயம் சிங் யாதவ். 2007-ம் ஆண்டு வரை முலாயம் ஆட்சி நடைபெற்றது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் நம்மை ஆதரிப்பார் என்று வாஜ்பாயிடம் பா.ஜ.க நிர்வாகிகள் நம்பிக்கையூட்டினர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யானது. பா.ஜ.க-வை முலாயம் சிங் யாதவ் ஆதரிக்கவில்லை. 2004 தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்றது. சமாஜ்வாடி கட்சிக்கு 39 எம்.பி-க்கள் கிடைத்தனர்.
Also Read: உத்தர் அரசியல்: பாபர் மசூதியைக் காப்பாற்றிய முலாயம் சிங்... கைவிட்ட கல்யாண் சிங்|மினி தொடர்|பாகம்-4
ஐந்தாண்டுக்காலம் ஆண்ட மாயாவதி!
2007 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தலித், பிராமணர் கூட்டணி என்கிற மாயாவதியின் தேர்தல் வியூகம் அந்த வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஆனால், அவரது அந்த வியூகம் விமர்சனத்துக்கு ஆளானது. பிராமணர் எதிர்ப்பு நிலையில் உறுதியாகக் கடைசிவரை இருந்த தன் அரசியல் ஆசான் கன்ஷிராமின் கொள்கைக்கு எதிராக, பிராமணர்களுடன் மாயாவதி கூட்டணி அமைத்ததாக விமர்சிக்கப்பட்டது.கன்ஷிராம்
மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 403. அவற்றில், 206 தொகுதிகளை மாயாவதி கைப்பற்றினார். முழுமையாக ஐந்தாண்டுக்காலம் உத்தரப்பிரதேசத்தை மாயாவதி ஆண்டார். அந்த ஐந்தாண்டுக்காலத்தில் மாயாவதி அரசின் சில செயல்பாடுகள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன. அடுத்து, 2012 சட்டமன்றத் தேர்தலில் மாயாவதிக்குத் தோல்வி காத்திருந்தது.
2012 சட்டமன்றத் தேர்தலில், நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக உருவெடுத்தார் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ்...
(உத்தர் அரசியல்... அலசுவோம்)
http://dlvr.it/SJc3pm
Tuesday, 8 February 2022
Home »
» உத்தர் அரசியல்: அரசியல் ஆசான் கன்ஷிராம் கொள்கைக்கு எதிராக மாயாவதி வியூகம்| மினி தொடர் |பகுதி - 5