விக்ரமின் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்து பதிவு செய்த ட்வீட் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இது ஒரு ஸ்ட்ராங்கான சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இந்தப் படத்தில் விக்ரமுடன் ‘கேஜிஎஃப்’ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கனிகா, மியா ஜார்ஜ், மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனை ‘மாஸ்டர்’, ‘மகான்’ படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் லலித் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடைபெற்று தற்போது தான் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டரில் கடந்த 15-ம் தேதி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவில் பெரும் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர் லலித் குமாருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக முன்னணி தயாரிப்பாளர் டி.சிவா தனது ட்விட்டர் பதிவில் அஜய் ஞானமுத்துவை டேக் செய்து, “போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தனது பதிவு சர்ச்சையாகி நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார்.
தயாரிப்பாளர் டி.சிவாவின் பதிவுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, “சார், கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை என்பதை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக, சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு டி.சிவா “உங்கள் பதிலுக்கு நன்றி. அது வதந்தியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், விவாதித்த பேசி தீர்த்திருக்கலாம். விக்ரமை நீங்கள் குறிப்பிடும்போது, தயாரிப்பாளரையும் நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன், ஏற்றுக்கொண்டு செய்யுங்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இதற்கும் பதிலளித்துள்ள அஜய் ஞானமுத்து, “இது வேண்டுமென்றே நான் செய்யவில்லை சார்!! நான் எப்போதும் எனது தயாரிப்பையும் தயாரிப்பாளரையும் உயர்வாக கருதுகிறேன்.. எப்போதும்!!” என்று கூறியுள்ளார்.
http://dlvr.it/SK5Nr2
Wednesday, 16 February 2022
Home »
» ”’கோப்ரா‘ பட பட்ஜெட் அதிகரித்தற்கு நான் காரணமா?” - இயக்குநரின் ட்வீட்டால் வெடித்த விவாதம்