தமிழகத்தில் அஞ்சலகங்களில் விநியோகிக்கும் படிவங்களில் தமிழ் இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்லாம் என சு.வெங்கடேசன் எம்.பி. ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்களில் பணவிடை, சிறுசேமிப்பு தொடர்பான படிவங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதாகவும் ஆனால், தமிழில் இல்லை என்றும் தொடர் புகார்கள் எழுந்த நிலையில், ஒன்றிய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதியதோடு, தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்து மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதையும் இந்தி திணிப்பையும் ஏற்க முடியாது என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தலைமை பொதுமேலாளர் தமிழ்நாட்டில் அஞ்சல் துறை படிவங்கள் அனைத்திலும் தமிழ் இருக்கும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு படிவங்களில் தமிழ் இருக்கும் என்றும் பிற 40 வகையான படிவங்களும் அடுத்த ஒரு மாதத்தில் அஞ்சலகங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பல்வேறு அஞ்சலகங்களில் தமிழில் படிவம் கிடைப்பதில்லை என தொடர் புகார் எழுந்தது. சென்னை கோடம்பாக்கம் அஞ்சலகத்தில் தமிழ் இல்லாமல் இந்தியில் படிவங்கள் இருந்ததாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அவர் தலையீடு செய்த நிலையில்தமிழில் படிவங்கள் இருப்பதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன்,
தமிழகத்தின் அனைத்து அஞ்சலகத்திலும் தமிழ் படிவங்கள் இருக்க வேண்டும் என்பது நாம் போராடி பெற்றுள்ள உரிமை.தமிழகத்தில் ஏதேனும் அஞ்சலகத்தில் தமிழ் படிவம் இல்லையெனில் எனது மின்னஞ்சல், முகநூல், டுவிட்டரின் வழியாக எனது கவனத்திற்கு கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளார்
http://dlvr.it/SJrz2X
Saturday, 12 February 2022
Home »
» அஞ்சலக படிவங்களில் தமிழ் இல்லையெனில் என்னை தொடர்பு கொள்ளலாம் - சு.வெங்கடேசன் எம்பி