இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்கு பாய்ந்ததற்கு எதிர்வினையாக உடனடி பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள ராணுவத் தளத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி பாய்ந்த ஏவுகணை, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விழுந்தது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு இந்தியா வருத்தம் தெரிவித்ததுடன், தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்தது.
இந்த விளக்கத்தை முழுமையாக ஏற்க மறுத்த பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து இரு நாடுகளும் இணைந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியறுத்தி வருகிறது. இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கும் நேற்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் என்ற ஊடக நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பான புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் சென்று விழுந்து, சில மணிநேரங்கள் கடந்தும் கூட இந்திய ராணுவக் கமாண்டர்கள், பாகிஸ்தானில் உள்ள ராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கவில்லை.
இதனால், பாகிஸ்தான் ராணுவம் இதற்கு பதிலடி கொடுக்க தயாராகியது. இந்தியாவில் இருந்து வந்த ஏவுகணைக்கு இணையாக மற்றொரு ஏவுகணையை இந்தியப் பகுதியில் வீசவும் பாகிஸ்தான் முடிவு செய்தது. ஆனால், சம்பவத்தின் தன்மையை ஆராய்ந்ததில் இது வேண்டுமென்றே நடந்தது அல்ல என பாகிஸ்தானுக்கு தெரியவந்தது. பின்னரே, பதிலடி கொடுக்கும் முடிவை கைவிட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SLq9zL
Thursday, 17 March 2022
Home »
» ஏவுகணை பாய்ந்ததற்கு பதிலடி கொடுக்க தயாரான பாகிஸ்தான் - நடந்தது என்ன? கசியும் தகவல்கள்