உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க அமோக வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் ஹோலி பண்டிகைக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். புதிய அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் அமைச்சரவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது. தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்த சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். அபர்ணா யாதவுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் அவரை சட்டமேலவை உறுப்பினராக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்
இதையடுத்து அவரை அமைச்சராக்க பா.ஜ.க முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதே போன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்து பா.ஜ.க சார்பாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள அதிதி சிங்குக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் ராஜேஷ்வர் சிங், ஆசிம் அருண் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெறவிருக்கின்றனர். ஐ.பி.எஸ் அதிகாரி ஆசிம் அருண் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதற்காக வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங்குக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்தும் கட்சித் தலைவர்கள் ஆலோசித்துவருகின்றனர். பங்கஜ், நொய்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
ஏற்கெனவே இருந்த அமைச்சர்களில் 15-க்கும் மேற்பட்டோரை மாற்ற யோகி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 11 பேர் யோகி அமைச்சரவையில் இடம்பெற்று தேர்தலில் தோல்வியடைந்தவர்கள். அவர்களை சட்டமேலவைக்கு அனுப்புவதில்லை என்று பா.ஜ.க முடிவு செய்துள்ளது. ஆனால், துணை முதல்வராக இருந்த கேசவ் பிரசாத், சமாஜ்வாடி கட்சியின் பல்லவி பட்டேலிடம் தோல்வி அடைந்துள்ளார். அவர் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவராகப் பார்க்கப்படுவதால் அவருக்கு மட்டும் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், சட்டமன்றத் தேர்தலில் 9-வது முறையாக வெற்றிபெற்றிருக்கும் சுரேஷ் கண்ணா என்பவரை இந்த முறை அமைச்சரவையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் மீடியா ஆலோசகர் சலாப் மணி திரிபாதியும் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி: தேர்தல் களத்தில் `புல்டோசர் பாபா'வாக மாறிய யோகி ஆதித்யநாத்! - பின்னணி என்ன?
http://dlvr.it/SLnTXH
Wednesday, 16 March 2022
Home »
» உ.பி: யோகி அமைச்சரவையில் முலாயம் சிங் யாதவ் மருமகள், போலீஸ் அதிகாரிகள் - பா.ஜ.க திட்டம்!