தி காஷ்மீர் ஃபைல்ஸ்:
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இதில், அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம், 1990-களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரை விட்டுவெளியேறி அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ட்ரைலர் வெளியானபோதே, இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்குவதுபோன்றும், இந்து-இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும்விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தற்போது படம் வெளியாகியிருக்கும் சூழ்நிலையில் மேலும் சர்ச்சை வெடித்து, பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இதன் பின்னணி என்ன?
தடை விதிக்கக்கோரி வழக்கு:
முதல் பிரச்னையாக, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்குத் தடைவிதிக்கவேண்டும் எனக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு, அடுத்த பிரச்னையாக, `இந்த திரைப்படத்தில் தனது கணவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தும்படியான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த காட்சிகளை நீக்கவேண்டும்' என 1990-களில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விமானப்படை வீரர் ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் முடிவில், மறைந்த விமானப்படை வீரர் ரவி கண்ணாவின் சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்த படக்குழுவினருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும், திரைப்படம் வெளியாவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
இதையடுத்து, மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு, கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
பாராட்டும் பா.ஜ.க குரல்கள்:
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். படக்குழுவினருடன் மோடி
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ``தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து பாலிவுட்டில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு எந்த மலிவான விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி எண்களும் வெளியாகவில்லை. மாஃபியா தேச விரோத செயல்திட்டங்கள் இல்லை. ஆனாலும் பாலிவுட் இந்தப் படம் குறித்து அமைதியை கடைபிடிப்பது ஏன் என தெரியவில்லை. நாடு மாறும் போது படங்களும் மாறும்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டி கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், ``தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க மக்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் இந்தப் படத்தை பார்ப்பேன்" என ட்விட் செய்திருக்கிறார். கங்கனா ரணாவத்
அதேபோல, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ``தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உங்களுக்கான படம். இப்படம் உங்களின் இதயத்தை கசக்கிப் பிழியும். ஆகவே, காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில், நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்" என தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார். எச்.ராஜா
இதுதவிர, தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, ``Kashmir files என்கிற இந்தி படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990ல் ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை 5,00,000 க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரை விட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவை தத்ரூபமாக காணமுடிகிறது" என கருத்து தெரிவித்திருக்கிறார்.
வரிச்சலுகைகொடுக்கும் பா.ஜ.க மாநிலங்கள்:
இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருக்கும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், வரிச்சலுகையும் கொடுத்து ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் 100% வரிவிலக்கு அளித்திருக்கின்றன. சிவராஜ் சிங் சௌகான்
மேலும், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், ``90-களில் காஷ்மீரை சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தை பெருவாரியான மக்கள் பார்க்க வேண்டும். அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இதற்கு வரிவிலக்கு கொடுக்கிறோம்” என தெரிவித்திருப்பதோடு, `இந்த திரைப்படத்தைக் காண்பதற்காக, மாநில காவல்துறையினர் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும்' எனவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.கேரள காங்கிரஸ்
எழுந்திருக்கும் எதிர்ப்புக் குரல்கள்:
இந்த நிலையில், பா.ஜ.க-வினருக்கு பதில்தரும் விதமாக கேரள காங்கிரஸ் கமிட்டி, ``#Kashmir_Files vs Truth (காஷ்மீர் பண்டிட் விவகாரம் பற்றிய உண்மைகள்)" எனும் தலைப்பில் 9 எதிர்கருத்துக்களை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. வி.பி. சிங் மற்றும் பாஜக தலைவர்கள்
அதில், `` 1989 டிசம்பரில் பா.ஜ.க ஆதரவுடன் வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்தது. பி.ஜே.பி ஆதரவு பெற்ற வி.பி.சிங் அரசாங்கத்தின் கீழ் அடுத்த மாதம் ஜனவரி 1990-ல் பண்டிட்களின் இடப்பெயர்வு தொடங்கியது. அப்போது, பா.ஜ.க ஒன்றுமே செய்யவில்லை, நவம்பர் மாதம் 1990 வரை வி.பி.சிங்கிற்கு ஆதரவைத் தொடர்ந்து வழங்கியது. மேலும், ஆர்.எஸ்.எஸ்.காரரான கவர்னர் ஜக்மோகனின் வழிகாட்டுதலின்படிதான் பண்டிதர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினார்கள். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பண்டிட்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக, பா.ஜ.க-வின் சொந்த ஆளுநர் ஜக்மோகன் அவர்களை ஜம்முவுக்கு இடம்மாறச் சொன்னார். ஏராளமான பண்டிட் குடும்பங்கள் பாதுகாப்பாக உணரவில்லை எனவே பயத்தில் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினார்கள்" என தெரிவித்திருக்கிறது.
மேலும்,``இந்த இடப்பெயர்வின்போது அயோத்தியில் ராமர் கோயில் பிரச்னையில் பாஜக நாட்டில் இந்து-முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு போலி சீற்றத்தை உருவாக்க பா.ஜ.க-வின் பிரசாரத்திற்கு பண்டிட்களின் பிரச்னை கையிலெடுத்தது. இடம்பெயர்ந்த பண்டிட் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவைப் பற்றி பா.ஜ.க பொய்கூறி வருகிறது. இப்படி, பண்டிட்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் பாஜக, மத்தியில் இரண்டு முறையும், காஷ்மீரில் ஒரு முறையும் ஆட்சியில் இருந்தும் அவர்களை காஷ்மீருக்கு அழைத்து வரவோ, குடியமர்த்தவோ இல்லை" என குற்றம் சாட்டியிருக்கிறது.தி காஷ்மீர் ஃபைல்ஸ்
கேரள காங்கிரஸ்க்கு அனுபம் கெர் பதிலடி:
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில், முக்கியக் கதாபாத்திரமாக (பண்டிட்டாக) நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ``இது சாதாரண திரைப்படம் அல்ல. இது ஒரு இயக்கம். 32 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கோர சம்பவத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது இந்த திரைப்படம். இப்படியிருக்கும்போது, இதுகுறித்து கொஞ்சம் கூட யோசிக்காமல் கேரள காங்கிரஸ் அபத்தமான கருத்துகளை வெளியிட்டுவருகிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிரதமர்களை பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்த கட்சி காங்கிரஸ். அதனால் அவர்கள் இதை சொல்லக்கூடாது என நினைக்கிறேன். இந்த படம் குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளில் கவனம் செலுத்த நான் விரும்பவில்லை" என தெரிவித்திருக்கிறார்.தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் அனுபம் கெர்
தொடரும் சர்ச்சை:
கேரள காங்கிரஸைப் போலவே பல்வேறு எதிர்க்கட்சியினர், சிறுபான்மையினர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் `பா.ஜ.க உண்மைக்கு புறம்பாக இந்தப் படத்தை வைத்து அனுதாப அரசியல் செய்கிறது' என எதிர்மறையாக விமர்சனம் செய்துவருகின்றனர். மறுபுறம் திரைப்படதிற்கு பாராட்டும், வரவேற்பும் கிடைத்தவண்ணம் இருக்கிறது. தற்போது, #KashmirFilesMovie, #Islamophobia உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இரண்டு தரப்பிலிருந்தும் ட்விட்டர் ட்ரென்டிங் செய்யப்பட்டு வருகின்றன.
http://dlvr.it/SLjRFQ
Tuesday, 15 March 2022
Home »
» `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மோடி, கங்கனா முதல் ஹெச். ராஜா வரை பாராட்டும்... சர்ச்சையும்! - ஓர் பின்னணி