உத்தரப்பிரதேசத்தில் மிகவும் இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெயருடன் இருப்பவர் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். முலாயம் சிங் யாதவ் மகனான அகிலேஷ் யாதவ் 2012-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வந்த திடீர் முதல்வராகவே பார்க்கப்படுகிறார். அது வரை சமாஜ்வாடி கட்சி தலைவராகவும், 3 முறை முதல்வராகவும் இருந்த முலாயம் சிங் யாதவ் மூன்று முறையும் பிறகட்சிகளின் துணையோடுதான் முதல்வர் பதவியில் இருந்தார். ஆனால் 2012-ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224 தொகுதியில் வெற்றி பெற்றுதனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்நேரம் 73 வயதில் இருந்த முலாயம் சிங் யாதவ் தனது மகனை முதல்வராக்க இதுவே சரியான நேரம் என்று கருதி அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார். அகிலேஷ் யாதவ் - சமாஜ்வாடி
தேர்தலின் போது அகிலேஷ் யாதவ் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படவே இல்லை. அறுதிப்பெரும்பான்மை இருக்கும் நேரத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தால் எந்தப்பிரச்னையும் இருக்காது என்று கருதி 38 வயதில் அவரை முலாயம் சிங் யாதவ் முதல்வராக்கினார்.
மைசூரில் பட்டப்படிப்பை முடித்த அகிலேஷ் யாதவ் முதல்வராகும் முன்பு 2000-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்றுமுறை மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். யோகியைப் போன்று இவரும் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நேரடியாக முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். 1973-ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்த அகிலேஷ் யாதவ் தற்போதைய யோகி ஆதித்யநாத்திற்கு முன்பு முதல்வர் பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்த தலைவராக இருந்தார். அதேசமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்று கட்சியில் தனது கை ஓங்க அகிலேஷ் யாதவ் பெரிய அளவில் போராடியது கிடையாது. அகிலேஷ் யாதவ்
2012-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடுமையாக அகிலேஷ் யாதவ் பணியாற்றினார். அகிலேஷ் யாதவ் முதல்வர் பதவிக்கு வந்த பிறகு அவர் கடுமையான சவால்களை எதிர்கொண்டார். சொந்த கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கவே மிகவும் சிரமப்பட்டார். அகிலேஷ் யாதவ் சித்தப்பா சிவ்பால் யாதவ் அகிலேஷ் யாதவ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதற்கு சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங் ஆதரவு கொடுத்தார். 2016-ம் ஆண்டு கட்சிக்குள் இருந்த பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. சிவ்பால் யாதவ் கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சியை ஆரம்பித்தார்.
இதனால் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றதேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் தோல்வி அடைந்தாலும் அகிலேஷ் யாதவ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். கடந்த 5 ஆண்டுகளில் அகிலேஷ் யாதவ் தன்னை ஒரு சிறந்த எதிர்க்கட்சி தலைவராக முன்னிறுத்திக்கொண்டதோடு, குண்டர்களின் கட்சி என்ற பெயரையும் மாற்ற கடுமையாக போராடினர். ``அகிலேஷ் யாதவ் தேர்தல் முடிவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம்!" - சரத் பவார் ஆறுதல்
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவே எதிர்பாராத விதமாக பிற்படுத்தப்பட்ட தலைவர்களை தன் வசம் இழுத்த அகிலேஷ் யாதவ் பாஜகவிற்கு கடுமையான போட்டியை கொடுத்தார். இதனால் பாஜக அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் இருந்து சிலரை தங்களது கட்சிக்கு இழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களில் சமாஜ்வாடி கட்சி 150 இடங்களுக்கு குறையாமல் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கையை பெற முடியாமல் அகிலேஷ் யாதவ் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறார். இன்னொரு புறம், பலம் வாய்ந்த பாஜக-வுக்கு எதிராக தனியாக களத்தில் நின்று கடந்த முறை பிடித்த இடங்களை விட இரு மடங்குக்கும் அதிகமான இடங்களை அகிலேஷ் கைபற்றியுள்ளதே பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவும் அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அகிலேஷ் மீண்டும் கோட்டை விட்டாரா, அல்லது இது வெற்றிகரமான தோல்வியா என்பது 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜகவை எதிர்ப்பதில் அவரின் வியூகம் போன்றவை முடிவு செய்யும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தரபிரதேசம் அதிக கவனம் கொண்டதாக இருக்கும்!
http://dlvr.it/SLRsGQ
Thursday, 10 March 2022
Home »
» அகிலேஷ் யாதவ்: தந்தை கொடுத்த முதல்வர் பதவி! - மீண்டும் கோட்டை விட்டாரா... வெற்றிகரமான தோல்வியா?