பணப் பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் பேடிஎம் பேமண்ட் வங்கி (Paytm Payment Bank) புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் இன்னபிற சேவைகளுக்காக பணத்தை வழங்குவதற்கும் கூகுள் பே, பேடிஎம், ஃபோன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆப்-களை பதிவிறக்கம் செய்வதும், அவற்றில் நமது வங்கிக் கணக்கு விவரங்களை இணைப்பதும் மிகவும் எளிமையாக இருப்பதால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப்களை நிர்வகிக்க தனித்தனியாக வங்கிகள் செயல்படுகின்றன. அவையாவும் ரிசர்வ் வங்கி வகுத்துக் கொடுத்த விதிமுறைகளின் கீழ் இயங்கி வருகின்றன.
இதனிடையே, பேடிஎம் ஆப்-ஐ நிர்வகிக்கும் பேடிஎம் பேமண்ட் வங்கியானது, பணப்பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை நடத்தி வந்த நிலையில், இதுதொடர்பான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதில், "பேடிஎம் பேமண்ட் வங்கி இனி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு பிறகே, புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட வேண்டும். அதேபோல், பேடிஎம் வங்கியின் தகவல் தொழில்நுட்ப அமைப்பை தணிக்கை செய்ய ஒரு ஐ.டி. தணிக்கை நிறுவனத்தை நியமிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
http://dlvr.it/SLWMxh
Friday, 11 March 2022
Home »
» Paytm-க்கு திடீரென கட்டுப்பாடுகளை விதித்த ரிசர்வ் வங்கி: என்ன காரணம்?