மாதரை போற்றும் மகத்தான நாள் தான் சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8). உலகம் முழுவதும் பல்துறைகளில் சாதித்து வரும் மகளிரை போற்றி பாடுகின்ற நாள் இது. இவ்வேளையில் தங்களது அபார விளையாட்டுத் திறனின் மூலம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்துக் கொடுக்கும் விளையாட்டு வீராங்கனைகள் குறித்து பார்க்கலாம்.
மிதாலி ராஜ்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமகள். சுமார் இரண்டு தசாப்தங்களாக கிரிக்கெட் களத்தை பந்தாடி வருகிறார். மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்பது தொடங்கி பல்வேறு சாதனைகளை படைத்தவர். 39 வயதான இவர் இந்திய அணியை நடப்பு 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். கடந்த முறை இவரது தலைமையிலான அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. இவரது பணியை பாராட்டி கடந்த 2021 வாக்கில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு.
பி.வி.சிந்து!
இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இந்தியாவில் பல குழந்தைகளை பேட்மிண்டன் ராக்கெட்டை கையிலெடுக்க செய்தவர் சிந்து. பலருக்கு இன்ஸ்பிரேஷன். ரியோ, டோக்கியோ என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கம் வென்றது. இவரது ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இப்போது தங்கம் மட்டும்தான் மிஸ்ஸிங். பேட்மிண்டனில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர். இந்திய நாட்டின் பல உயரிய விருதுகளை வென்றவர்.
மேரி கோம்!
‘மேரி கோம்’ என்ற பெயரை கேட்டாலே பலருக்கு உடலில் எனர்ஜி எக்கச்சக்கமாக கிடைக்கும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை நிறைந்தது இவரது வாழ்க்கை கதை. 2001-இல் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது என்ட்ரியை விளையாட்டு உலகில் பதிவு செய்தவர். 2012 ஒலிம்பிக்கில் வெண்கலம், 2014 ஆசிய விளையாட்டு மற்றும் 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். வெற்றியை அதிகம் பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தவர்.
அவனி லேகாரா!
இந்தியாவின் அரை நூற்றாண்டு கால பாராலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் முதல் தங்கத்தை தட்டி தூக்கி வந்த சிங்கப் பெண் அவனி லேகாரா தான். 11 வயதில் ஏற்பட்ட விபத்தினால் அவருக்கு தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு வயிற்றுப் பகுதிக்கு கீழ் உள்ள உடல் பகுதி செயலிழந்து போனது. அதனால் அவரது உடல் முடங்கி போயிருந்தாலும் துளி அளவு கூட அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் என இரண்டு பிரிவிலும் தங்கம் வென்றவர். பாராலிம்பிக்கில் புதிய சாதனை படைத்தவர். அதோடு அதன் மூலம் உலக சாதனையை சமன் செய்தவர். அண்மையில் பத்மஸ்ரீ விருதை வென்றவர்.
மீராபாய் சானு!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை தான் மீராபாய் சானு. பளு தூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த்தில் தங்கம் வென்றவர். தன் விளையாட்டு ஆர்வத்தை வறுமைக்கு எதிராக சமர் செய்து வென்ற பெண்மணி.
பெண்கள் முயன்றால் அனைத்தும் சாத்தியம் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த சிங்கப் பெண்கள் விளங்குகின்றனர். அதோடு பல துறைகளில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியும் கொடுக்கின்றனர்.
தகவல்: ANI
http://dlvr.it/SLHC6Q
Tuesday, 8 March 2022
Home »
» மகளிர் தினம்: 'மிதாலி to மீராபாய்' விளையாட்டில் பாலின வேறுபாட்டை தகர்த்த சிங்கப்பெண்கள்!