"கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்யும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழக, கேரளா கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4 நாள்களுக்கு இடிமின்னலுடன் மழை பெய்யும். நெல்லை மாவட்டம் பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கோடை மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனி மாவட்டம் போடியில் தொடர்மழையால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால், போடியிலிருந்து மூணாறு செல்லும் முந்தல் சாலையில் வெள்ளியை உருக்கி விட்டது போன்று நீர் வழிந்தோடியது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பருத்தி, உளுந்து, நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 25 புள்ளி 40 அடியாக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடி,மின்னலுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து மண்ணை குளிர்வித்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால், மலைப்பாதையில் ஆங்காங்கே புதுப்புது அருவிகள் தோன்றி காண்போரை ரசிக்க வைக்கிறது.
http://dlvr.it/SNWn9y
Wednesday, 13 April 2022
Home »
» தமிழகத்தில் 4 ஆவது நாளாக மழை: நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் புத்தம் புது அருவிகள்