கர்நாடகா மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல். அரசு ஒப்பந்ததாரரான இவர், கர்நாடக மாநில அரசின் கிராம வளர்ச்சித் திட்டப்பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்தார். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் கடன் பெற்று, முதலீடு செய்து சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான பணியை அரசுக்காக செய்துமுடித்திருக்கிறார். இந்த பணிகளுக்கு உரிய தொகையை, மாநில அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சகம் அவருக்கு கொடுக்கவேண்டும். ஆனால், தான் செய்த பணிகளுக்கான தொகையைப் பலமுறை கேட்டுக்கொண்டும், அமைச்சகம் விடுவிக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல்
இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவை நேரில் சந்தித்து சந்தோஷ் பாட்டீல் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அமைச்சரின் உதவியாளர்கள், `தொகை கைக்கு கிடைக்கவேண்டுமெனில், அதில் 40 சதவிகிதப் பங்கை அமைச்சருக்கு கமிஷனாகக் கொடுக்கவேண்டும்' என சந்தோஷிடம் கேட்டுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த சந்தோஷ் பாட்டீல், கடந்த மார்ச் 30-ம் தேதி `அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் 40% லஞ்சம் கேட்கிறார்' என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.பாஜக உறுப்பினர் தற்கொலை: ``எதிர்க்கட்சிகள் யாரும் நீதிபதியாக வேண்டாம்..!"- முதல்வர் பசவராஜ் பொம்மை
தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்ததாரர்:
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் ஈஸ்வரப்பா, ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, உடுப்பியிலுள்ள ஒரு விடுதியில் சந்தோஷ் பாட்டீல், மர்மமான முறையில் இறந்துகிடந்தார். காவல்துறையின் விசாரணையில், சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் கிடைத்த செய்தியில், `தன் தற்கொலைக்கு முழுக்காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாதான்' என குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஈஸ்வரப்பா
வெடித்த போராட்டம்:
அதைத்தொடர்ந்து, `உயிரிழந்த ஒப்பந்ததாரருக்கு நியாயம் வேண்டும், தற்கொலைக்கு காரணமான பா.ஜ.க அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகவேண்டும்' எனக்கோரி காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரசாந்த் பாட்டீல் மற்றும் குடும்பத்தினர், `அமைச்சர் ஈஸ்வரப்பாவின் தூண்டுதலினால்தான் சந்தோஷ் உயிரிழந்தார்' என உடுப்பி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அமைச்சர் ஈஸ்வரப்பா, அவர் உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளின்கீழ் உடுப்பி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.சித்தராமையா
தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி, காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்து, ஈஸ்வரப்பாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மனு கொடுத்தனர். ஆனால், அமைச்சர் ஈஸ்வரப்பா, `நான் எந்தத் தவறும் செய்யவில்லை! அதனால் பதவி விலகப்போவதில்லை' என திட்டவட்டமாகக் கூறினார். இதைத்தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தினர். மேலும், பெங்களூருவில் உள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வீடும் முற்றுகையிட்டது.
பதவி விலகிய அமைச்சர்:
நாளுக்குநாள் பிரச்னை அதிகரித்துக்கொண்டிருக்க, கர்நாடகா பா.ஜ.க கடும் நெருக்கடியை சந்தித்தது. சொந்தக் கட்சிக்குள்ளாகவே, ஈஸ்வரப்பாவுக்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. மாநில பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த விவகாரத்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவருவதாக பா.ஜ.க மேலிடத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில், அமைச்சர் ஈஸ்வரப்பா, அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா
இதுகுறித்துப் பேசிய ஈஸ்வரப்பா, ``எனது குலதெய்வம் சாமுண்டீஸ்வரி மீது ஆணையாக சொல்கிறேன். எனக்கும், தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ் பாட்டீலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சியினர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை என விரைவில் நிரூபிப்பேன். அதுவரை அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க முடிவெடுத்திருக்கிறேன். நான் இந்த அளவிற்கு உயர, என்னை வளர்த்தெடுத்த கட்சிக்கும், எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் என்னால் எவ்வித இடைஞ்சலும் ஏற்பட விரும்பவில்லை. கட்சி நலனை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை, முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வழங்க இருக்கிறேன்" என தெரிவித்தார். ஈஸ்வரப்பா
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (ஏப்ரல் 15-ம் தேதி) தனது ஆதரவாளர்களுடன் பெங்களூரிலுள்ள முதல்வர் இல்லத்துக்குச் சென்ற ஈஸ்வரப்பா, தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கொடுத்தார்.
கைது செய்யக்கோரும் எதிர்க்கட்சிகள்:
`பதவி விலகினால் மட்டும் போதாது, செய்த குற்றத்துக்கு உரிய தண்டனைய அனுபவிக்க வேண்டும்! சந்தோஷ் பாட்டீல் தனது செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்திகளே அவரது மரணத்துக்கு ஈஸ்வரப்பாதான் காரணம் என்பதை உறுதிசெய்துவிட்டது! எனவே, காவல்துறையினர் உடனடியாக ஈஸ்வரப்பாவை கைதுசெய்ய வேண்டும்! அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்!" என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ``பாஜக உறுப்பினர் தற்கொலை வழக்கு; அமைச்சர் மீது வழக்கு பதிவு!" - முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல்
http://dlvr.it/SNk8L3
Sunday, 17 April 2022
Home »
» ஒப்பந்ததாரர் தற்கொலை; அழுத்தத்தால் அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா... என்ன நடக்கிறது கர்நாடகாவில்?