மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கேதர்நாத் சுக்லா. சுக்லா, அவரின் மகன் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து எம்.எல்.ஏ.கடந்த மாதம் கொட்வாலி போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் உள்ளூர் நாடக கலைஞர் நீரஜ் குந்தார் என்பவர் இந்த தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் நீரஜ் குந்தாரை கைது செய்தனர்.
இது குறித்த தகவல் கேள்விப்பட்டதும், யூடியூப் சேனல் நடத்தும் ஒருவர், பத்திரிகையாளர்கள், குந்தார் உறவினர்கள் என மொத்தம் 40 பேர் குந்தார் கைது செய்யப்பட்ட போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டம் நடத்தியவர்களையும் போலீஸார் கைது செய்தனர். மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸார் அடித்து உதைத்து அனைவரையும் ஆடையை கழற்றும் படி உத்தரவிட்டு இருக்கிறார்கள். போலீஸ் லாக்கப்பில் கைதான பத்திரிகையாளர்கள்
அதோடு அவர்கள் அனைவரையும் அரை நிர்வாணத்தோடு நிற்கும்படி போலீஸார் நிர்ப்பந்தித்தனர். இதை பார்த்த ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டார். இது காட்டுத்தீயாக பரவியது. பத்திரிகையாளர்கள் போலீஸ் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து சித்தி மாவட்ட எஸ்.பி. முகேஷ் குமார் கூறுகையில், ``முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை” என்று தெரிவித்தார். கூடுதல் டிஜி வெங்கடேஷ்வர் ராவ் இது குறித்து கூறுகையில், ``கைது செய்யப்படுபவர்கள் லாக்கப்பில் வைக்கப்படும் போது அவர்கள் தற்கொலை போன்ற காரியத்தில் ஈடுபடாமல் இருக்க ஆடைகளை கழற்ற சொல்வது வழக்கமான ஒன்றுதான். குந்தார் கைது செய்யப்பட்டதற்கு சிலர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மணீஷ் திவாரி இது குறித்து கூறுகையில் ``குந்தார் கைது செய்யப்பட்ட செய்தியை சேகரிக்க சென்றோம். என்னையும் மற்றவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்திற்குள் வைத்து அடித்து உதைத்து அவமானப்படுத்தினர். என்னை கைது செய்து 18 மணி நேரம் லாக்கபில் அடைத்தனர். உள்ளே எங்களை அடித்து உதைத்ததோடு, கடுமையான வார்த்தைகளால் திட்டி ஆடைகளையும் அவிழ்க்க சொல்லி அவமானப்படுத்தினர்.
உள்ளூர் அரசியல்வாதிக்கு எதிராக நான் இதற்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்ததால் அதற்கு பழிவாங்கும் விதமாக போலீஸார் இவ்வாறு நடந்து கொண்டனர்” என்று குற்றம் சாட்டினார். இச்சம்பவம் குறித்து மாநில டிஜிபி சுதிர் சக்சேனா கூறுகையில், ``சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் எஸ்.பி.மட்டத்திலான அதிகாரி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். கமல்நாத்
இது குறித்து அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் வினீத் திவாரி கூறுகையில், ``அரசியல் உள்நோக்கத்தோடு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களே இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டால் சாமானிய மக்களின் நிலை எவ்வாகும்?” என்று கேள்வி எழுப்பினார். கைது செய்யப்பட்ட அனைவரும் மறுநாள்தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர்கள் அவமானப்படுத்தப்பட்டதற்கு மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செயல் மிகவும் வெட்கக்கேடானது என்று கூறிய அவர் இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கமல்நாத் கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் மத்திய பிரதேச சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
http://dlvr.it/SNGrKs
Saturday, 9 April 2022
Home »
» ம.பி: காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் - என்ன நடந்தது?