உலக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள ‘அவதார் 2’ படத்தின் டீசர் மிரட்டலாக வெளியாகியுள்ளது.
‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை, அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல்ரீதியாக சாதனை படைத்தது. 23.7 கோடி அமெரிக்க டாலர்களில் உருவான இந்தப் படம், சுமார் 284.72 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டி, திரைப்பட வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது.
இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். சுமார் 5 பாகங்களாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘அவதார் 2’ படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியநிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. அந்தவகையில், 13 வருடங்களுக்குப் பிறகு ‘அவதார் 2’ திரைப்படம் வருகிற டிசம்பர் 16-ம் தேதி, டால்பி பிரீமியம் 4k உடன், 3D தொழில்நுட்பத்தில், உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.
இதையடுத்து படத்திற்கான ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறியநிலையில், கடந்த மாதம் லாஸ்வேகாஸில் நடைபெற்ற CinemaCon நிகழ்ச்சியில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) என்ற பெயரில் டீசர் வெளியானது. சினிமா பிரபலங்கள் ‘‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் டீசர் பார்த்து பிரமித்தநிலையில், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
‘ஒண்ணு உறுதியா சொல்றேன்... நாம எங்க போனாலும்... இந்த குடும்பம்தான்... நம்மளோட கோட்ட...’ என்று மிரட்டலாக டீசர் வெளியாகியுள்ளது. கடந்த முதல் பாகத்தில் நிலத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளநிலையில், இரண்டாவது பாகம் நீரில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானதுபோல் இருக்கிறது.
ரஸ்ஸல் கார்பெண்டர் ஒளிப்பதிவு கண்களை திரையை விட்டு அகலாமல் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. சைமன் பிராங்ளன் இசை துள்ளலாக மனதை வருடும் வகையில் அமைந்துள்ளது. 250 மில்லியன் அமெரிக்க டாலர்களில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைட்ஸ்டோர்ம் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. 20-த் செஞ்சுரி ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.
http://dlvr.it/SQ6Dpr
Tuesday, 10 May 2022
Home »
» ‘நம்மளோட கோட்ட’...வேற லெவலில் உருவாகும் ‘அவதார் 2’-துள்ளல் இசையில் மிரட்டலாக வெளியான டீசர்