காவல் நிலையத்தில் விசாரணை கைதி கொலை செய்த வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கடந்த 18 ஆம் தேதி சந்தேக முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றஞ்சாட்டினால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்க்காவல்படையை சேர்ந்த தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். மேலும் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் தாக்கிய காயங்கள் இருந்ததால் மேலும் சந்தேகம் எழுந்தது.
இதனை தொடர்ந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் விக்னேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து காவலர் பவுன்ராஜ், ஊர்காவல்படையை சேர்ந்த தீபக், தலைமை காவலர் எழுத்தர் முனாப், குமார், சந்திரகுமார், ஜெகஜீவன் ஆகிய 6 பேரை சிபிசிஐடி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தேசிய பட்டியலின ஆணையம் காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில் விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தென்மண்டல காவல்துறைக்கு மாற்றம் செய்தும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற போலீசார் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
http://dlvr.it/SQMVRw
Saturday, 14 May 2022
Home »
» விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கில் அடுத்த அதிரடி நடவடிக்கை!