60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட இரு பழைமை வாய்ந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலைகள் கடத்தலை தடுக்க என்ன செய்கிறது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு? அது குறித்து தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் சுவாமி கோவிலில் இருந்த சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்து தரக்கோரி அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டிச்சேரியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிலைகளின் பழைய புகைப்படத்தை பெற்று தற்போதுள்ள சிலைகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டபோது போலியான சிலைகள் என்பது தெரியவந்தது.
பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகள் கோவில் ஊழியர்களுடன் இணைந்து கடத்தப்பட்டிருப்பதாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சந்தேகித்தனர். திருடப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளின் பழமையான புகைப்படங்களை வைத்து பல அருங்காட்சிய இணையதளங்களில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தேடினர். அப்போது சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் மியூசியத்தில் இருப்பதும், அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் மியூசியத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு இரு சிலைகளும் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளையும் மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்காவிலிருந்த 10 சிலைகள் தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் சமீபகாலங்களாக தீவிர நடவடிக்கை தொடர்ந்து வருகின்றனர்.
சிலை கடத்தலில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்ப்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தமிழகத்தினுடைய சொத்து, சிலைகள்; அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.
செய்தியாளர் - சுப்பிரமணியன்
http://dlvr.it/SSK1y7
Thursday, 16 June 2022
Home »
» 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட 2 சிலைகள் மீட்பு