பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டு 20 நாள்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்தார். சொகுசுக் கப்பலில் ரெய்டு நடத்திய மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்தார். ஆனால், அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் டெல்லி சிறப்பு விசாரணைக்குழு சஞ்சய் சிங் தலைமையில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்குழு சமீபத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் பெயர் இடம்பெறவில்லை. ரெய்டின்போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் பிடிபடவில்லை என்றும், போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க மருத்துவப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டதோடு இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்படுவதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஷாருக் கான்
தற்போது இந்த வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்கநர் சஞ்சய் சிங், ஆர்யன் கானிடம் விசாரணை நடத்திய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆர்யன் கான் தன்னிடம் கேட்ட கேள்விகள் மனதை உருக்குவதாக இருந்தன என்று தெரிவித்திருக்கிறார். ஆர்யன் கானிடம் திறந்த மனதுடன் பேசுவதாக உறுதியளித்த பிறகு என்னிடம் பேசினார். ``சார் என்னை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் போன்றும், போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்வதாகவும் சித்திரிக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் அபத்தமானதாக இல்லையா... என்னிடம் போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படியிருந்தும் என்னைக் கைதுசெய்தனர். சார், நீங்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள். எனது புகழையும் அழித்துவிட்டீர்கள். நான் ஏன் பல வாரங்கள் சிறையில் இருக்க வேண்டும்... நான் அதற்குத்தான் தகுதியானவனா?” என்று சஞ்சய் சிங்கிடம் ஆர்யன் கான் கேட்டிருக்கிறார்.``அமெரிக்காவில் படித்தபோது கஞ்சா பயன்படுத்தினேன்" - வாக்குமூலத்தில் ஆர்யன் கான் சொன்ன காரணம்!
ஆர்யன் கானின் தந்தை ஷாருக் கானும் சஞ்சய் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அது தொடர்பாகப் பேசுகையில், ``ஷாருக் கான் என்னைச் சந்திக்க விரும்பினார். நான் ஏற்கெனவே மற்ற கைதிகளின் பெற்றோர்களைச் சந்தித்திருப்பதால் ஷாருக் கானைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தேன்” என்று சஞ்சய் சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ``ஷாருக் கான் என்னைச் சந்தித்துப் பேசியபோது, ஆர்யன் கானின் மனநிலை குறித்து மிகவும் கவலை தெரிவித்தார். ஆர்யன் கான் சரியாகத் தூங்கவில்லை என்று சொன்னேன். அப்போது ஆர்யன் கானுடன் ஷாருக் கான் இரவில் தங்கினார். தன் மகன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதப் பூர்வாங்க ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார். அதோடு மிகவும் கண்ணீர்மல்க, `நாங்கள் மிகப்பெரிய கிரிமினல்கள்போலவும், சமுதாயத்தை அழிக்கத் துடிக்கும் அரக்கர்கள்போலவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறோம்” என்று சொன்னதாக சஞ்சய் சிங் தெரிவித்தார்.
http://dlvr.it/SS0sLm
Saturday, 11 June 2022
Home »
» ``மகன் ஆர்யன் கான் கைதின்போது கிரிமினலைப்போல் எங்களைச் சித்திரித்தனர்" - நடிகர் ஷாருக் கான்