டெத் ஓவரில் 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் டாசன் சனகா. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பல்லேகலேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் டாசன் சனகா மட்டும் ஓரளவு போராடினார். 3 ஓவர்களுக்கு 59 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் டாசன் சனகா 12 பந்துகளில் 6 ரன்களுடனும் சமிகா கருணாரத்னே 6 பந்துகளில் 8 ரன்களுடனும் இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சனகா ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர், பவுண்டரி என பறக்கவிட, அவருக்கு கருணரத்னேவும் நல்ல கம்பெனி கொடுத்தார்.
18வது ஓவரில் 22 ரன்கள் விளாசிய டாசன் சனகா - கருணரத்னே ஜோடி, 19வது ஓவரில் 18 ரன்களை விளாசியது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேன் ரிச்சர்ட்சன் 2 வைடு பந்து வீசினார். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன்கள். 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தை ஷனகா பவுண்டரிக்கு விளாசினார். 5வது பந்திலும் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது பவுலர் வைடு பந்தாக வீசினார். இதையடுத்து இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
டாசன் சனகா 25 பந்துகளில் 54 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டெத் ஓவரில் 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டாசன் சனகா. டி20 கிரிக்கெட்டில் கடைசி 3 ஓவர்கள் டெத் ஓவர் என அழைக்கப்படுகிறது. இதையும் படிக்கலாம்: தவறுகளை திருத்திக்கொள்வாரா ரிஷப் பண்ட்? முதல் போட்டியில் சொதப்பியதற்கான காரணங்கள் என்ன?
http://dlvr.it/SS3NHx
Sunday, 12 June 2022
Home »
» டெத் ஓவரில் அதிக ரன்கள் குவிப்பு: இலங்கை ஆல்-ரவுண்டர் டாசன் சனகா புதிய சாதனை