இன்றைய தினம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் அனைத்து அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் நீக்கப்பட்டது தொடர்பாக சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சசிரேகா புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், ''இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரோடு இருந்தவர்கள் தொண்டர்கள் இல்லை; ரூ.500, 1000-த்துக்கு கூடிய குண்டர்கள். சொல்லப்போனால் அவருமே ஒரு குண்டர்தான். அவரை வளர்த்து ஆளாக்கிய அ.தி.மு.க.வின் தலைமைச் செயலகத்துக்குள்ளேயே சென்று கடப்பாரையால் அதை சேதப்படுத்திய பச்சைத்துரோகி ஓ.பி.எஸ். ஆகவே அவரும் ஒரு குண்டர்தான்.
ஓ.பன்னீர்செல்வம் இனி தனது சட்டையோடு வேண்டுமானால் போராடலாம்; சட்டப் போராட்டமெல்லாம் இனி செய்ய முடியாது. அதேபோல அவர் வீட்டு செடியிலுள்ள இரட்டை இலையை வேண்டுமானால் அவர் கிழித்துப்போடலாம்... தவிர இரட்டை இலை பக்கமெல்லாம் வரவே முடியாது.
இரட்டை இலையை மறந்துவிட்டு, ஓய்வெடுப்பதுதான் அவருக்கு நல்லது. இதுபோன்றொரு துரோகியை, இனி தமிழகமும் சந்திக்கக்கூடாது; அதிமுக-வும் சந்திக்காது. ஓபிஎஸ் மட்டுமன்றி, அவரது மகனும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். அப்பாவும் மகனும் கழகத்துக்கு துரோகச்செயல் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று மன்னராகவும், தங்களை காக்க கூடிய தந்தையாகவும், புரட்சித்தலைவர் - புரட்சித்தலைவி வடிவிலும் அண்ணன் ஈ.பி.எஸ்.-ஐ தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்” என்றார்.
http://dlvr.it/STjlsj