கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு வருடமாக கடை வாடகை கொடுக்காததால் கடையின் உரிமையாளர் கடை முன் கருங்கற்களை குவித்து கடையை திறக்கவிடாமல் செய்துள்ளார். ஹெல்மெட் அணிந்து வந்து கடைமுன் டெம்போவில் கற்களை கொட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் பிரசாத் மற்றும் கண்ணன் என்ற சகோதரர்கள் மொபைல் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் கட்டிட உரிமையாளருக்கு கடந்த ஒரு வருடமாக வாடகை பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்டிட உரிமையாளர் பலமுறை கேட்டும் கொடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த உரிமையாளர் சங்கரநாராயணன் கடையை காலி செய்யுமாறு கண்ணன் மற்றும் பிரசாத்திடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் கடையை காலி செய்ய மறுத்து வந்துள்ளனர்.
இதனால் சங்கரநாராயணன், இரவோடு இரவாக டெம்போவில் பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து கடையை திறக்க முடியாத அளவிற்கு கடை முன் கொட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் காலையில் கடை திறக்க வந்த சகோதரர்கள் கடையின் முன்பு கருங்கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சங்கரநாராயணன் தரப்பிலும், கண்ணன் பிரசாத் ஆகியோர் தரப்பிலும் கோட்டார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவில் தலையில் ஹெல்மெட் அணிந்து வரும் நபர் டெம்போவில் கொண்டு வந்த கற்களை கடை முன் கொட்டி ச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. வாடகை கொடுக்காமல் இருந்ததால் கடை திறக்க முடியாதபடி பாறாங்கற்களை கொட்டி சென்ற உரிமையாளரின் செயல் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/STfyJt
Sunday, 10 July 2022
Home »
» ’வாடகை கொடுக்க மாட்டியா!’.. உரிமையாளரின் செயலால் திகைத்துப் போன வாடகைதாரர்!