வரலாறு என்பது நிகழ்ந்த ஒன்று. ஆனால், வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்வதில் அவர் அவர்க்கு ஓர் ஆதாயம் எப்போதும் உண்டு. பட்டேலுக்கு அவர் விரும்பும் அதிகாரத்தை வழங்கியிருந்தால், ஒருங்கிணைப்பட்ட இந்தியாவை அவர் எப்போதோ உருவாக்கியிருப்பார் என்கிற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெவ்வேறு வடிவங்களில் இணையத்தில் வட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது, மீண்டும் அதைப் பேசுபொருளாக்கியிருக்கிறார் பாரதப் பிரதமர் மோடியால் நியமன எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரமாண்டப் படங்களின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் ராஜமௌலியின் தந்தை.
RRR writer explains why they gave tribute to Patel only, but not Gandhi & Nehru. pic.twitter.com/ye2qnHX2Vh— Naweed (@Spoof_Junkey) July 7, 2022
வீடியோவின் தமிழாக்கம்
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'RRR' படத்தின் இறுதிக் காட்சியில், இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களை வைத்து ஒரு பாடல் படமாக்கப்பட்டிருக்கும். அதில், காந்தி நேருவைத் தவிர ஏனைய சுதந்திரப் போராட்ட வீரர்களை மட்டும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதுகுறித்து ஒருவர் விஜயேந்திர பிரசாத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு அவர், "பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறும்போது, 17 பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி (PCC) உறுப்பினர்கள் இருந்தார்கள். சுதந்திர போராட்டத்தின் தேசிய தலைவராக காந்தி இருந்ததால், பிரிட்டிஷார் காந்தியிடம் பிரதமர் ஒருவரைக் காங்கிரஸில் இருந்து தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தினர். 17 பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களையும் அழைத்து பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்குமாறு காந்தி கூறினார். அத்தோடு, பிரதமர் என்பதற்கு கதர் அணிவது மட்டுமே போதுமானது கிடையாது. படித்திருக்க வேண்டும். வெளிநாடுகளுடனான பேசும் திறன் அவசியம் என்றெல்லாம் கூறிவிட்டு தன்னுடைய தேர்வாக நேருவை முன்வைக்கிறார். 17 PCCக்களிடமும் தங்களின் விருப்பங்களை எழுதுமாறு கூறுகிறார். 15 நபர்கள் சர்தார் வல்லபாய் படேலை முன்மொழிந்தனர். ஒருவர் க்ரிபால்னியை முன்மொழிந்தார். ஒருவர் யாருக்கும் வாக்களிக்கவில்லை.
ஜனநாயகத்தின் மீது காந்திக்கு சிறிதேனும் மதிப்பு இருந்தால், அவர் வல்லபாய் பட்டேலை பிரதமராக்கியிருக்க வேண்டும். ஆனால், நேரு மீது தனக்கிருந்த அபிப்பிராயத்தினாலேயே நேருவை 18வது PCCயாக முன்மொழிந்தார். அத்தோடு நில்லாமல், பட்டேலிடமும் நேருவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். காந்தி உயிரோடு இருக்கும்வரை, பட்டேல் பிரதமராவதற்கு எவ்வித தகிடுதத்தங்களும் செய்யக்கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டார். ஒருவேளை நேருவுக்குப் பதிலாக பட்டேல் பிரதமராகியிருந்தால், காஷ்மீர் இப்போது இப்படி எரிந்துகொண்டிருக்காது. மகாத்மா காந்தி
நான் காந்தி குறித்து நிறைய படித்துவிட்டேன். ஆனால், ஏன் காந்தி இப்படிச் செய்தார் என்பதற்கான எந்தவித ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களும் இன்று வரையில் என் கண்ணில் படவில்லை. 561 சமஸ்தானங்களின் பிரச்னைகளை ஒரு நொடியில் தீர்த்து வைத்தவர் பட்டேல். 561 சமஸ்தானங்களிடமும் கையெழுத்திடுமாறு பட்டேல் சொன்ன மறுகணமே அவர்கள் அனைவரும் கையொப்பம் இட்டுவிட்டனர். ஆனால், தனக்கு காஷ்மீருடன் நெருங்கிய பந்தம் இருப்பதால், அங்கு நேரு பிறந்ததால், காஷ்மீரை மட்டுமே தானே பார்த்துக்கொள்வதாக பட்டேலிடம் அறிவித்தார் நேரு. ஆனால், இப்போது காஷ்மீரின் நிலைமையைப் பாருங்கள். அது இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது" எனப் பேட்டி அளித்திருந்தார். கடந்த மூன்று தினங்களாக சமூக வளைதளங்களில் வைரலாக இந்த வீடியோ பரப்பப்படுகிறது. இதுவரையில் இந்தக் குறிப்பிட்ட வீடியோவை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். சரி, இவற்றுள் எதுவெல்லாம் உண்மை என்பதை சில புத்தகங்களை ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு பார்த்துவிடலாம்.
உண்மையில் இந்தக் கட்டுரை 2018ம் ஆண்டு 'தி பிரின்ட்' இணையதளத்தில் வெளியானது. அதன்பின்னர் பல்வேறு இந்துத்வ தளங்களில் பட்டேலுக்கு பதிலாக நேருவை காந்தி தேர்ந்தெடுத்தார் என்னும் கதை வெளியாகிக்கொண்டிருக்கிறது. தனது சுயசரிதையான India Wins Freedom நூலில், மௌலான அபுல் கலாம் ஆசாதே இதுகுறித்து எழுதியிருக்கிறார்.
1939ம் ஆண்டு காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஆசாத். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தலைவர்கள் உலகப் போர்,வெள்ளையனே வெளியேறு போராட்டம் (Quit India Movement) எனப் பல காரணங்களுக்காக அடுத்த சில ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1946 வரையில் ஆசாதே தலைவராக தொடர்கிறார். Nehru
அப்போது காங்கிரஸின் உயர்மட்டக்குழுவில் இருக்கும் சிலர் வேறு ஒருவரை தலைவராகத் தீர்மானிக்க முடிவெடுத்து இருப்பதாக அறிகிறார் ஆசாத். சர்தாரும் அவரின் சகாக்களும் அவரே அடுத்த தலைவர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக தானே தலைவராக இருந்துவிட்டதால், மீண்டும் தன்னையே தலைவராக முன்மொழிய அவர் விரும்பவில்லை. அதே சமயம், தன் எண்ண ஓட்டங்களை ஒத்த ஒருவரை தலைவராக முன்மொழிய விழைகிறார். ஆசாதின் மனதில் இருந்த பெயர் நேரு. அதன்படி, 1946ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அடுத்தத் தலைவராக நேருவை முன்மொழிந்து, அனைவரும் விருப்பு வெறுப்பின்றி நேருவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார். காந்தியின் மனச்சாய்வு சர்தார் பட்டேல் பக்கம் இருந்தாலும், அவர் எதையும் வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறார். சிலர் சர்தாரையும், சிலர் ஆச்சார்ய க்ரிபாலனியையும் முன்மொழிந்தாலும், இறுதியாக பலரின் விருப்பத்துடன் நேருவே தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.- India Wins Freedom - Chapter `Prelude to Partititon' (பக்கம் 161)
ஆக, ஜனநாயகத்துக்கு எதிராக காந்தி நடந்துகொண்டார் என்பதும், படேலுக்குப் பதிலாக நேருவை முன்மொழிந்தார் என்பது ஆசாதின் சுயசரிதையின்படி பார்த்தால் இல்லை என்றாகிவிடுகிறது. அப்படியெனில் காந்தி ஜனநாயகத்துக்கு எதிராக நடக்கவே இல்லையா எனக் கேட்கலாம். அதெல்லாம் நடந்திருக்கிறார். ஆனால், அது போஸுக்கு எதிராக!
1939ம் ஆண்டு இரண்டாம் முறையாக காங்கிரஸின் தலைவராக போஸ் தேர்வு செய்யப்பட்டபோது, காந்தி அதை எதிர்த்தார். காந்தியின் அழுத்தத்தின் காரணமாகவே போஸ் அப்போது பதவி விலகினார். காந்தி உருவாக்க நினைத்த காங்கிரஸ் போஸால் வழி தவறிப்போக வாய்ப்புண்டு எனக் கருதினார் காந்தி. 1939 தேர்தலிலேயே நேரு தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை. ஏனெனில், அப்போதே அவருக்கு அதில் விருப்பம் இல்லை. அதனாலேயே அதிகம் பிரபலம் இல்லாத பட்டாபி சித்தாரமையா போஸுக்கு எதிராக நிறுத்தப்பட்டார். ஒருவேளை நேரு போஸூக்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்தால், வரலாறு வேறுவிதமாக மாறியிருக்கும் என்பதையே பல புத்தகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆக, விஜயேந்திர பிரசாத் சொல்லியிருப்பதில் முதல் வரி பொய்.காந்தி, போஸ்அடுத்ததாக, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் போது, காங்கிரஸின் தலைவராக இருந்தவர் கிரிபாலனி. காங்கிரஸின் தலைவரே பிரதமர் என்றால், கிரிபாலனிதானே பிரதமர் ஆகியிருக்க வேண்டும். இதில் எங்கேயிருந்து காந்தி சினிமா காட்சியைப் போல பட்டேலிடம் சத்தியம் வாங்கிக்கொள்ளும் காட்சி எல்லாம் நடைபெற்றது என்பதை அறியமுடியவில்லை. இன்னொன்று இரவோடு இரவாக எல்லாம் நேருவுக்கு எந்தப் பொறுப்புகளும் மாற்றப்படவில்லை.
1946-ம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியே கிளெமெண்ட் அட்லியும், ஸ்டெஃப்போர்டு க்ரிப்ஸும் எல்லா பொறுப்புகளையும் நேரு தலையில் சுமத்திவிடுகிறார்கள் என்பதே வரலாறு. அதாவது நாம் சுதந்திரம் பெறுவதற்குக் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாக நடந்த சம்பவங்கள் இவை. ஓர் இடைக்கால அரசாங்கத்தை அப்போதே வைஸ்ராயின் சிறப்பு கவுன்சில் கட்டமைத்துவிடுகிறது. அதன்படி அதன் துணைத் தலைவரான நேரு பிரதமராகிவிடுகிறார். ஜவஹர்லால் நேரு வெளியுறவுத் துறையையும் கவனித்துக்கொள்கிறார். சர்தார் பட்டேலுக்கு உள்துறை அமைச்சகம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு கோரிக்கை எழுப்புகிறது. அதிலும் நேரு பிரதமர் என்றே அழைக்கப்படுகிறார்.சர்தார் வல்லபாய் பட்டேல்(The Untold Story of India's Partition - NS Sarila. இந்தப் புத்தகத்தில் Nehru in the saddle பகுதியில் இதற்கான தரவுகள் இருக்கின்றன. நரேந்திர சிங் சரிலா லார்டு மவுன்ட்பேட்டனுக்கு தனி உதவியாளராக இருந்தவர். அதன்பிறகு 1948ல் இருந்து 1985 வரை IFSல் இருந்தவர்.)
ஆக, நேருவே பலரின் சாய்ஸ் என்பது இதன் மூலம் திடமாக உறுதி செய்யப்படுகிறது. அந்த வீடியோவின் அடுத்த பகுதிக்கு வருவோம். ஒருவேளை பட்டேல் பிரதமராகியிருந்தால் காஷ்மீர் இப்போது போல் எரிந்துகொண்டிருக்காது. அதற்கு முழுக்க முழுக்க நேருவே காரணம் என்கிறார் விஜயேந்திர பிரசாத்.
இந்தியாவை இரண்டாகப் பிரிப்பதற்கு ஜின்னாவுக்கு அடுத்தபடியாக முதலில் ஆதரவளித்தவர் காந்தியோ நேருவோ அல்ல, பட்டேல். இந்தியாவை இரண்டாகப் பிரிப்பதில் பிரிட்டிஷுக்கு லாபமே அதிகம் இருந்தன. இந்தப் பிரச்னையின் மூலம் இன்னும் சில ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்பதும் இந்தியாவிலேயே இருக்க முடியும் என்பதும் பிரிட்டிஷின் எண்ணமாக இருந்தது. அதனாலேயே ஜின்னாவின் யோசனையை லார்டு மவுன்ட்பேட்டன் முதலில் சொன்னது பட்டேலிடம் தான். பட்டேலும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தியா பிரிந்ததற்குக் காரணம் நேருதான் எனப் பல ஆண்டுகளாகவே வலதுசாரிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
குல்தீப் நாயரின் சுயசரிதையான 'Beyond the Lines' புத்தகத்தில் இதுகுறித்து பல தரவுகள் இருக்கின்றன. எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அந்தப் பகுதிகளை எல்லாம் பாகிஸ்தானாக பிரித்துக்கொள்வது என முடிவுசெய்யப்படுகிறது. ஆனால், லாகூர் மாகாணத்தில்கூட இந்துக்களே பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருந்தனர் என்பதே அப்போதைய வரலாறு. லாகூரில் இவ்வளவு படுகொலைகள் நடக்குமென ஜின்னா எதிர்பார்க்கவில்லை என ஜின்னாவின் செயலாளரான குர்ஷித், குல்தீப் நாயரிடம் தெரிவித்திருக்கிறார். ஜின்னா நினைத்ததெல்லாம் பாராளுமன்றத்தின் வழி ஒரு தேசம். அங்கு இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதோர் ஒரே இடத்தில் இருக்க முடியும் என நினைத்திருக்கிறார் ஜின்னா. ஜின்னா
அதே சமயம், மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் சீக்கியர்களும் வெளியேற வேண்டும் என ஆர்வமாக இருந்தார் பட்டேல். இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என நினைத்தார் பட்டேல். ஏனெனில் அவரைப் பொறுத்தவரையில் அவர்கள், அவர்களுக்கான பாதையை ஏற்கெனவே தேர்வு செய்துவிட்டனர். டெல்லியில் இஸ்லாமியர்களின் கடைகள் இந்துக்கள் சூறையாடப்பட்ட போதே, அதைத் தடுத்த ஒரே நபர் நேருதான். ஏனெனில் நேரு மட்டுமே அப்போது எந்த மதத்தின் பக்கமும் சாயாமல் இருந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவின் போது, இப்படி ஆயிரக்கணக்கில் மக்கள் புலம்பெயர்வார்கள் என ஜின்னா நினைத்திருக்கவில்லை. மக்களை மாற்றிக்கொள்ளும் திட்டத்துக்கு அப்போதைய காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டுமே எதிராகத்தான் நின்றது. ஆனால், இந்திய பாகிஸ்ஹான் எல்லைகளில் லட்சக்கணக்கான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதே நம் தேசம் பிரிந்ததின் கறுப்புப் பக்கங்கள்.- Beyond the lines - Childhood and Partition Chapter
1947ம் ஆண்டு மார்ச் வரையில் சில பெரிய மாகாணங்கள் இந்தியா பாகிஸ்தான் இரண்டுடனும் சேராமல் பிரிட்டிஷின் பாதுகாப்புடன் சுதந்திரமாக இருக்க முடிவு செய்கின்றனர். அதில் ஒன்று மகாராஜா ஹரி சிங் ஆட்சி புரிந்த ஜம்மு & காஷ்மீர். ஆனால், அடுத்த மாதமே இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இப்படியான மாகாணங்கள் சேர வேண்டும் என பிரிட்டிஷ் அழுத்தம் தர ஆரம்பிக்கிறது. ஒருவேளை பாகிஸ்தானுடன் செல்ல ஹரி சிங் முடிவு செய்துவிட்டால், அதை இந்தியாவின் தலைவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என ஹரி சிங்கிடமே தெரிவித்திருக்கிறார் லார்டு மவுன்ட்பேட்டன். காஷ்மீர் பாகிஸ்தானுடன் சென்றுவிட வேண்டும் என்பதே மவுன்ட்பேட்டனின் விருப்பமாக இருந்திருக்கிறது. ஆனால், இரு தேசங்களில் எதனுடன் சேர்ந்தாலும், காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பில்லை என உணர்ந்தார் ஹரி சிங்.Jawaharlal Nehru, Edwina and Louis Mountbatten
அதே போல, 560 சமஸ்தானங்களை ஒன்றிணைத்த பட்டேல், காஷ்மீரை மட்டும் ஏன் ஒன்றிணைக்கவில்லை. ஏனெனில் 'நேருதானே எல்லாவற்றையும் செய்வதாகக் குறிப்பிட்டார்' என்பதும் ஒரு புரட்டுதான். இரு தேசங்களும் சுதந்திரம் அடைந்த பின்னரும், ஹரி சிங் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஹரி சிங்கின் வாரிசான கரண் சிங், "பிரிட்டிஷ் இந்த பிரதேசங்களைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என ஒருநாளும் ஹரி சிங் நம்பவில்லை என்பதே அவர் காலம் தாழ்த்தியதற்குக் காரணம்" எனத் தெரிவிக்கிறார்.
1947ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பட்டேலுக்குக் கடிதம் எழுதுகிறார் நேரு. ஏனெனில் விஜயேந்திர பிரசாத் சொல்வது போல, காஷ்மீர் உடன்படிக்கையைக் கவனித்துக்கொண்டது நேரு அல்ல பட்டேல். அதனாலே ஹரி சிங்குடன் நேரடித் தொடர்பில் இருந்த பட்டேலுக்கு கடிதம் எழுதினார் நேரு.
"இந்தக் குளிர்காலத்தில் காஷ்மீர் தனிமைப்பட்டு இருக்கும். அதனால், பாகிஸ்தானால் எளிதாக காஷ்மீருக்குள் ஊடுருவிவிட முடியும். அதனால், இந்திய தேசத்துடன் மகாராஜா நட்புறவு பேணுவது அவசியம்" எனக் கடித்ததில் குறிப்பிடுகிறார் நேரு. அக்டோபர் இரண்டாம் தேதி, இதையொட்டி ஹரி சிங்கிற்கு கடிதம் எழுதுகிறார் வல்லபாய் படேல். இந்தியாவுடன் தந்தி, தொலைபேசி, ஒயர்லெஸ் மற்றும் ரேடியோ என எல்லா வழியிலும் இணைந்துவிட மகாராஜா விரைவில் முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார் படேல். - The Shadow of the Great Game (பக்கம் 349)
குல்தீப் நாயர் புத்தகத்தின் இரண்டாம் பகுதியான 'Early pages of Governance'-ல் இருந்து பட்டேலுக்கு வேறு யோசனைகளும் இருந்ததாகத் தெரிவிக்கிறது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் நேருவுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. முஸ்லிம் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய காஷ்மீர், பாகிஸ்தானுடன் போவதே சரி என பட்டேல், ஷேக் அப்துல்லாவிடம் தெரிவித்திருக்கிறார். டெல்லி தலைமைக்கு மஹாராஜா சம்மதக் கடிதம் அனுப்பிய போதும் பட்டேல் தீர்க்கமான முடிவில் இல்லை. நாம் காஷ்மீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. நம்முடைய தட்டில் ஏற்கெனவே நிறைய இருக்கிறது என்பதே பட்டேலின் வாதமாக இருந்திருக்கிறது. Lord Mountbatten, Sardar Vallabhai Patel
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரிப்பதில் உடன்பாடு இல்லாத ஒரே நபர் காந்திதான். அதை அவர் ஒருநாளும் விரும்பியது இல்லை. அதே போல், பட்டேலுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்றும், நேருவை முன்னிலைப்படுத்தினார் என்றும் பல குற்றச்சாட்டுகளை இனியும் காந்தியின் மீது வைக்கத்தான் போகிறார்கள். இந்திய அளவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, காந்திக்கு அடுத்தபடியாக பிரபலமாக இருந்தவர் நேருதான். இன்னொரு முக்கியமான விஷயம், அப்போது பட்டேலின் வயதும் அதிகம், உடல்நிலையும் இந்திய சுதந்திரத்தின் போது சரியில்லை. ஒரு சிறப்பான இந்தியாவைக் கட்டமைக்க, இளமையான பிரதமர் தேவைப்பட்டார். சர்தார் பட்டேல், நேருவைவிட 14 வயது பெரியவர்.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாறுகளில் புனைவுகளைக் கலந்து நமக்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில் மாற்றிப் படித்து இன்பம் அடைந்துகொள்ள முடியும். இந்தியா என்னும் யூனியன்களின் தேசம் உருவானதும் ஒரே இரவில் அல்ல என்பதை VP மேனன் எழுதிய 'Integration of Princely States' (Integration of the Indian States) புத்தகத்தின் மூலம் அறிய முடியும். அப்படியெனில் நேருவுக்கும், பட்டேலுக்கும் சச்சரவுகளே இருந்ததில்லையா என்றால், அதெல்லாம் பலமுறை சண்டையிட்டிருக்கிறார்கள். நேருவின் அமைச்சரவை என்றில்லை, உலகில் இருக்கக்கூடிய எல்லா அமைச்சரவைகளிலும் சண்டைகளும், சச்சரவுகளும் நிச்சயம் இருந்திருக்கும். வரலாற்றை வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள். சினிமா புனைவு எழுத்தாளர்கள் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவதே நல்லது.
நன்றி:
The Shadow of the Great Game: The Untold Story of India's Partition - Narendra Singh Sarila
Integration of the Indian States - VP Menon
Beyond The Lines: An Autobiography - Kuldip Nayar
India Wins Freedom - Maulana Abul Kalam Azad
Twitter: Advaidism
http://dlvr.it/STfKtX
Sunday, 10 July 2022
Home »
» விஜயேந்திர பிரசாத் வைரல்
வீடியோ - நேரு, காந்தி குறித்து அவர் சொல்வதில் எதெல்லாம் உண்மை? | Factcheck