சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றிருக்கிறது. அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட இந்தக் கப்பல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
சீனாவின் மூன்றாம் தலைமுறை விண்வெளிக் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது. இந்தக் கப்பலில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், அணுசக்தி போர் கப்பல் அல்ல என்பதாலும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தக் கப்பலின் சிறப்பம்சங்களும், வருகையும் இந்தியா கவலைப்படுவதற்கான காரணங்களாக விரிகின்றன. சீனாவின் அதிநவீனமான இந்தக் கப்பல், விண்வெளி ஆய்வுமையம் நிர்வகிக்கும் கப்பல் என்பதோடு, செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள், கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை கண்காணிக்கக்கூடியது. 11 ஆயிரம் மெட்ரிக் டன் எடையை சுமந்து செல்லக்கூடிய இந்தக் கப்பல், 750 கிலோமீட்டர் சுற்றளவு வரை கண்காணிக்கக் கூடிய திறன் கொண்டது.
இதனால், தென்னிந்திய துறைமுகங்களையும், அணுஉலைகளையும் சீனக் கப்பல் கண்காணிக்கக்கூடும் என்பதால், பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுகுறித்து எதிர்வினையாற்றியிருந்த இந்திய வெளியுறவு அமைச்சகம், நிலைமையை உன்னிப்பாக கவனித்துவருவதாக கூறியிருந்தது.
http://dlvr.it/SWmc6x
Wednesday, 17 August 2022
Home »
» எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற சீனாவின் உளவுக்கப்பல் - உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா