வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையைக்கூட செயற்கைக்கோள் வழியாக கண்டறியலாம். கணிணி புரட்சியைபோல வருங்காலங்களில் செயற்கைக்கோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் என தஞ்சையில் முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டியளித்துள்ளார்.
இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் சங்கத்தின் 45-ஆவது மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. அதில் பல்வேறு மருத்துவ நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் பல்வேறு மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை இளம் மருத்துவர்களுக்கு தெரிவித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ‘’அறிவியல் தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. அந்தவகையில் மருத்துவ அறுவைசிகிச்சையிலும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்துள்ளது. கத்தரிக்கோலால் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட காலத்தில் இருந்து தற்போது இயந்திரம் மூலம்வரை மிக சிறப்பாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு புதிய வகை அறுவைசிகிச்சை தொழில்நுட்பங்கள் வெளியாகிக்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் ஆய்வு காலம் முழுவதும் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். கொரோனா தாக்கத்தில் இருந்து மூன்று ஆண்டுகளில் மீண்டுவர உதவியது அறிவியல் வளர்ச்சிதான். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அறிவியல் வளர்ச்சி இல்லை என்றால், கொரோனாவிலிருந்து மீள 10 ஆண்டு காலம் ஆகியிருக்கும். உலகளவில், இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தால், நோய்களும் அதிகரிக்கும் சூழலில், மருத்துவர்களின் தேவைகளும் அதிகமாக உள்ளது. மேலும், அதற்கேற்ற அறிவியலும் தேவையாக உள்ளது.
உலகளவில் விண்ணுக்கு பல ஆயிரம் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. நமது நாட்டிலிருந்தும் நூறுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350 செயற்கைக்கோள் அனுப்பப்ட்டுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் உலகளவில் 3 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளது. வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறியப்படலாம் எனக் கூறுகிறார்கள். கணிணி புரட்சியைபோல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம்’’ என்றார்.
http://dlvr.it/SWbh7v
Sunday, 14 August 2022
Home »
» அறுவை சிகிச்சையைக்கூட செயற்கைக்கோள் வழியாக கண்டறியலாம் - மயில்சாமி அண்ணாதுரை