நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக கருதப்படும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மும்பையின் தென்பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. மொபைல் போன், பெட்ரோல், டெக்ஸ்டைல், கெமிக்கல், சில்லறை வர்த்தகம் என அனைத்து துறையிலும் கொடி கட்டிப்பறக்கும் முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிட்டல் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று மும்பையில் இருக்கிறது. இம்மருத்துவமனைக்கு நேற்று காலையில் இருந்து 8 முறை மிரட்டல் அழைப்புகள் வந்தன.
போனில் பேசிய மர்ம நபர் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் எங்கிருந்து போன் வந்தது என்ற விவரங்களுடன் மும்பை டிபி மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது. போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் தரங்க் கூறுகையில், ``முகேஷ் அம்பானிக்கு மர்ம நபரிடமிருந்து மிரட்டல் விடுத்து காலையில் இருந்து 8 போன் அழைப்புகள் வந்தது.
இது குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அம்பானியின் மருத்துவமனை மற்றும் அவரின் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு ஜெலட்டின் குச்சிகள் ஏற்றப்பட்ட கார் ஒன்று முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்பவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். முகேஷ் அம்பானி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இப்போது குண்டு துளைக்காத கார்களையே அதிகமாக பயன்படுத்தி வருகிறார். முகேஷ் அம்பானி தற்போது படிப்படியாக தனது சொத்துக்களை தனது மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். மொபைல் சேவையை ஒரு மகனுக்கு கொடுத்திருக்கிறார். சில்லறை வர்த்தகம் எனப்படும் சூப்பர் மார்க்கெட் தொழிலை தனது மகளுக்கு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
http://dlvr.it/SWfpxr
Monday, 15 August 2022
Home »
» ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு வந்த மர்ம அழைப்புகள்... தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!