சிவிங்கிப் புலிகள் புதிய வாழ்விடத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளப் போராடக்கூடும் என்று காட்டுயிர் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 1947ம் ஆண்டில் கடைசி சிவிங்கிப் புலி (சீட்டா) காணப்பட்டது. அதன் பிறகு, 1952ஆம் ஆண்டு சிவிங்கிப் புலி இனம் இந்தியாவில் முற்றிலும் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனம் அழிந்து தற்போது 74 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு 8 சிவிங்கிப் புலிகளை சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்களுடன் பயணித்த அந்த விமானம் இன்று காலை 8 மணியளவில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் மஹாராஜ்புரா விமானத் தளத்தை வந்தடைந்தது. இன்னும் சிறிது நேரத்தில் இந்த சிவிங்கிப் புலிகள் அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் 165 கிமீ தொலைவில் உள்ள மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த 8 சிவிங்கிப் புலிகளில் 3 சிவிங்கிப் புலிகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று விடுவிக்கிறார்.
முன்னதாக, சிவிங்கிப் புலிகளை ஏற்றிவந்த விமானத்தின் வெளிப்புறத்தில் புலியின் முகம் வரையப்பட்டிருந்தது. விமானத்தில் கொண்டு வரப்பட்ட போது சிவிங்கிப் புலிகளுக்கு உணவு எதுவும் வழங்கப்படவில்லை. அவைகளுக்கு குமட்டல், மயக்கம் உள்ளிட்ட அசவுகரியங்கள் ஏற்படலாம் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது. குனோ தேசிய பூங்காவிற்குள் திறந்துவிடப்பட்ட பிறகு மின்சார வேலி அமைக்கப்பட்ட பகுதியில் சிவிங்கிப் புலிகள் உலா வரும். புதியதோர் வாழ்விடத்திலும், காலநிலையிலும் விடப்பட்டுள்ளதால் இந்த சிவிங்கிப் புலிகளை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்தபடி இருப்பார்கள். 1952-களுக்குப் பின்னர் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில், மீண்டும் அவை இந்தியக் காடுகளுக்கு வருவது காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சிவிங்கிப் புலிகள் புதிய வாழ்விடத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளப் போராடக்கூடும் என்றும் ஏற்கனவே வனப்பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் சிறுத்தைகளுக்கும் சிவிங்கிப் புலிகளுக்கும் மோதல் நிகழக்கூடும் என்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.அழிந்துவரும் பட்டியலில் இருக்கும் சிவிங்கிப் புலிகள், உலகம் முழுவதும் 7,000க்கும் குறைவான எண்ணிக்கையிலே உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான சிவிங்கிப் புலிகள் ஆப்ரிக்காவின் சவன்னா காடுகளில் வாழ்கின்றன.இந்தியாவிற்கு சிவிங்கிப் புலிகளை கொண்டு வரும் திட்டத்திற்கு, கடந்த 2009ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் தரப்பட்டது. அப்போதைய மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 2010ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு நேரில் சென்று சிவிங்கிப் புலிகளை கொண்டு வரும் திட்டத்தை விரைவுபடுத்தினார். ஆனால், 2013ம் ஆண்டு இத்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் 2020ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தது. அதன் மூலமாகத்தான் இப்போது சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையா? சிவிங்கியா?சிறுத்தையும் (leopard) சிவிங்கிப் புலியும் (cheetah) பார்க்க கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் இரண்டும் வெவ்வேறு விலங்குகள். சிவிங்கிப் புலிகள் வட்ட முகம் கொண்டவை. இவற்றின் கண்களில் இருந்து வாய்ப்பகுதி வரை கறுப்புக் கோடு இருக்கும். மெலிந்த உடலமைப்புடனும் நீண்ட கால்களுடனும் இவை இருக்கும். சிறுத்தைகள் பருத்த உடலுடனும் குட்டையான கால்களுடனும் இருக்கும்.இதையும் படிக்க: சூடான உணவில் எலுமிச்சைச் சாற்றை பிழியக்கூடாது.. காரணம் இதுதான்!?
http://dlvr.it/SYTj6N
Saturday, 17 September 2022
Home »
» 74 ஆண்டுகளுக்கு பின் இந்திய காட்டில் சீட்டா: புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைக்குமா?