மதுரையில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டு இரும்பு கதவு கழன்று விழுந்த நிகழ்வு பயணிகள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாநகரில் 200க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு பெரியார், மாட்டுத்தாவணி, ஆர்ப்பாளையம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில் உள்ள பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருவதாக ஏராளமான புகார்கள் ஏற்கனவே உள்ளன. பேருந்துகள் பாதி வழியில் நிற்பது, இருக்கைகள் சேதம், படிக்கட்டுகளில் ஓட்டை என அரசுப் பேருந்துகளின் அவலநிலை குறித்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையிலும் அது முறையாக சீர் செய்யப்படாமல் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அவனியாபுரம் தெற்குவாசல் வழியாக மாட்டுத்தாவணி வரை இயக்கப்படும் TN58 N 1481 என்ற அரசு பேருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பக்கவாட்டு இரும்புக்கதவு நடுவழியில் கழண்டு கீழே விழுந்து இரும்பு கம்பி, பலகை என சாலையில் விழுந்து சிதறியது. பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டதால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்க்கப்பட்டது.
அதனை அடுத்து அரசுப் பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் சிரித்தபடியே கீழே இறங்கி, சாலையில் சிதறிக் கிடந்த பாகங்களை எடுத்துச் சென்றனர். மதுரை மாநகரில் உள்ள அரசு பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்கு மீண்டும் ஒரு சான்றாக இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உயிருக்கே உலை வைக்கும் இம்மாதிரியான பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து பாதுகாப்பை உறுதி செய்து இயக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://dlvr.it/SXzndp
Thursday, 8 September 2022
Home »
» நடுவழியில் கழண்டு விழுந்த அரசு பேருந்தின் பாகங்கள்! பீதியில் உறைந்த பயணிகள்! மதுரை சம்பவம்