பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் இவ்வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கான் மூன்று வாரம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதோடு கடந்த மே மாதம் இவ்வழக்கு விசாரணையில் இருந்து ஆர்யன் கான் முற்றிலும் விடுவிக்கப்பட்டார். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் பெயர் இடம் பெறவே இல்லை. ஆர்யன் கான் உட்பட 5 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை ஆரம்பத்தில் விசாரித்த அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
குறிப்பாக மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த அதிகாரிகள் ஒரு பக்கமாகவே விசாரணை நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சமீர் வான்கடே இடமாற்றம் செய்யப்பட்டார். அதோடு இவ்வழக்கு விசாரணையை சரியாக விசாரிக்காத காரணத்தால் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை தற்போது டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ளது. அதில் ஆர்யன் கான் தொடர்பான வழக்கு விசாரணையில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இவ்வழக்கை விசாரித்த அதிகாரிகளின் நோக்கமே சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். மொத்தம் 69 பேரிடம் இது தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் பலர் தங்களது வாக்குமூலத்தை பலமுறை மாற்றி கூறியிருக்கின்றனர்.
அதோடு இதற்கு முந்தையை அதிகாரிகள் விசாரணையே சரி வர நடக்கவில்லை என்றும் கண்டுபிடித்துள்ளனர். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டவுடன் அவரை விடுவிக்க பண பேரம் பேசப்பட்டதாக வந்த குற்றச்சாட்டிற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிலரை குறிவைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டு இருப்பதையும் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. 7 முதல் 8 போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகள் இவ்வழக்கில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அந்த அதிகாரிகள் மீது இலாகா பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேராத சில அதிகாரிகளும் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளின் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்யன் கான்
ஆரம்பத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்யன் கானை கைது செய்த போது அவர் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்தக்கூடியவர் என்றும், போதைப்பொருள் கடத்துபவர் என்றும், போதைப்பொருளை வாங்கி விநியோகம் செய்வதில் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தனர். இதற்கு ஆர்யன் கானின் வாட்ஸ்ஆப் சாட்டிங் விபரங்களை சாட்சியாக அளித்திருந்தனர். ஆனால் இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தில் இருந்தும் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளார். இப்போது வெப் சீரியஸ் இயக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
http://dlvr.it/SbP7xd
Thursday, 20 October 2022
Home »
» ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் வழக்கு விசாரணையில் ஏராளமான முறைகேடுகள் - 7 பேர் மீது நடவடிக்கை?!