மும்பை அருகிலுள்ள ராய்கட் மாவட்டத்தின் பென் நகரத்தில் ஆற்றுப்பகுதியில் இன்று வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஜெலட்டின் குச்சிகளுடன் எலெக்ட்ரிக் சர்கியூட், கடிகாரம் இணைக்கப்பட்டிருந்தன. டெட்டனேட்டரும் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவை பாலத்துக்குக் கீழே கிடந்தன. பாலத்தைத் தகர்க்கும் நோக்கில் அவை வைக்கப்பட்டிருந்தனவா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து அவற்றைச் செயலிழக்கச் செய்தனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி சோம்நாத், ``பென் பாலத்துக்குக் கீழே கண்டுபிடிக்கப்பட்டவை டம்மி வெடிகுண்டுகள். இவற்றை யார் வைத்தார்கள் என்று விசாரித்துவருகிறோம். அந்தப் பகுதியில் நாளை மீண்டும் சோதனை நடத்தவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டுகள் நிரப்பிய படகு ஒன்று ராய்கட் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மும்பையில் தீவிரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மும்பையில் இந்த மாதம் 13-ம் தேதியிலிருந்து டிசம்பர் 12-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடைவிதித்து போலீஸார் உத்தரவிட்டிருக்கின்றனர். டிரோன்கள் மட்டுமல்லாது , தனியார் ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் வெளியிட்டிருக்கும் உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர். 144 தடை உத்தரவும் மும்பையில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் தீவிரவாதத் தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். தீவிரவாதிகள் டிரோன்கள், சிறிய தானியங்கி விமானங்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வி.ஐ.பி-க்கள் மற்றும் முக்கிய இலக்குகளைத் தாக்கும் அபாயம் இருக்கிறது. மும்பை
அதோடு மும்பையின் சட்டம்-ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் பொதுச்சொத்துகள் மீது தாக்குதல் நடத்தும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற நாசவேலைகளைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடுகள் அவசியம் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். பாராசூட், பலூன்களும் மும்பை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் 30 நாள்களுக்குப் பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும்பட்சத்தில் மும்பை துணை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி வாங்கி இவற்றைப் பறக்கவிடலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மும்பை: தீவிரவாதச் செயல்களுக்கு ரூ.13 கோடி அனுப்பிவைத்த தாவூத் இப்ராஹிம்; என்.ஐ.ஏ விசாரணையில் தகவல்!
http://dlvr.it/ScfG5W
Saturday, 12 November 2022
Home »
» மும்பை: வெடிகுண்டு அச்சுறுத்தல்; ஒரு மாதத்துக்கு டிரோன்கள், ஹெலிகாப்டர்களுக்குத் தடை!