மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெக்தீப் தன்கர் நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மணிப்பூர் ஆளுநராக இருக்கும் இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்துவந்தார். இந்த நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த சி.வி.ஆனந்த போஸ் மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாந்நானம் பகுதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சி.வி.ஆனந்தபோஸ், தலைமை செயலராக இருந்து ஓய்வுபெற்றவர். முதலமைச்சரின் செயலர், அணுசக்தி துறையில் கல்வி நிறுவனங்களின் தலைவர், துணை வேந்தர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டுவசதி குழுவின் தலைவராகவும், திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப கோயில் கணக்கெடுப்புக்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் இருந்தவர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார். தற்போது கேரளாவில் இருந்து ஆளுநர் பதவிவகிக்கும் 20-வது நபர் ஆவார் சி.வி.ஆனந்த போஸ். மம்தா பானர்ஜி
மேற்கு வங்க ஆளுநராக அறிவிக்கப்பட்ட நிலையில் சி.வி.ஆனந்த போஸ் கூறுகையில், ``என்மீதுள்ள நம்பிக்கையில் இப்படி ஒரு பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கேரள மக்களுக்கு நன்றி, கடவுளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலமைப்புக்குள் நின்றுகொண்டு செயல்பட முயல்வேன். மேற்கு வங்க மக்களுக்கு பயன்படும் விஷயங்களை முன்னின்று நடத்த முயல்வேன். மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் இடையில் சுமூக பந்தத்தை ஏற்படுத்த முயல்வேன். சமாதானத்துடனும், நட்புறவுடனும் இந்த பொறுப்பை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன். கலையாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் கலசாரமாக இருந்தாலும் உலகில் கேரளத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் நானும் ஒரு எளிய பங்களிப்பாளனாக மாறுவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.பினராயி விஜயன், ஆரிப் முகமது கான்
கேரளாவில் ஆளுநர் ஆரிப் கானுக்கும் மாநில அரசுக்கும் மோதல்போக்கு உள்ளது. அதுபோல மேற்குவங்கத்தில் நிகழுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ``அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. எதையும் மோதலாக நான் பார்க்கவில்லை. மக்களமைப்பில் ஆரோக்கியமான ஆலோசனைகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அதையெல்லாம் பேலன்ஸ் செய்து முன்னேறிச் செல்வோம். அரசிய்லமைப்பு அதெற்கெல்லாம் வழிகாட்டுகிறது" என்றார்.
http://dlvr.it/Sd1vMF
Saturday, 19 November 2022
Home »
» ``மேற்குவங்க அரசுடன் மோதும் எண்ணம் இல்லை" - ஆளுநரான கேரளத்தின் ஆனந்த போஸ் ஐஏஎஸ்