இத்தாலி அதிபர் தேர்தல் 2022
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இத்தாலி அதிபர் தேர்தல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், செர்ஜியோ மேட்டரெல்லா (Sergio Mattarella) ஜனநாயக கட்சியின் ஆதரவோடு வெற்றி பெற்றார்.
பெரும்பான்மையை நிருபிக்க 505 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 756 வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் செர்ஜியோ மேட்டரெல்லா. இவர் வாங்கிய வாக்குகளின் சதவிகிதம் 75.22 ஆகும். இவர், இரண்டாவது முறையாக அதிபர் பதவியில் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற முதல் இத்தாலி அதிபரும் இவரே ஆவார்.செர்ஜியோ மேட்டரெல்லா
இத்தாலி பிரதமர் தேர்தல் 2022
இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்ததையடுத்து, அந்த நாட்டின் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக இத்தாலியின் பிரதமராக இருந்த, மரியோ டிராகி (Mario Draghi) பதவி விலகினார்.
அதனையடுத்து, இத்தாலிக்கு புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகின. அவற்றில் 26 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் தேசிய சகோதரத்துவக் கட்சியின் தலைவரான ஜியார்ஜியா மெலோனி (Giorgia Meloni). இவரே இத்தாலியின் முதல் பெண் பிரதமர் ஆவார். அதுமட்டுமில்லாமல், இரண்டாம் உலகப்போருக்கு பின்பாக, தீவிர வலதுசாரி கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைவது இதே முதல்முறையாகும்.
பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் 2022
பிலிப்பைன்ஸின் 17-வது அதிபர் தேர்தல் இந்த ஆண்டு மே 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 67 லட்சம் வாக்காளர்கள், வாக்களித்தனர். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறும். களத்தில் 10 வேட்பாளர்கள் இருந்தபோதிலும், 58.77 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் பிலிப்பைன்ஸ் பெடரல் கட்சியை சேர்ந்த பாங்பாங் மார்கோஸ் (Bongbong Marcos). 27.94 சதவிகிதவாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார் சுயேச்சை வேட்பாளர் Leni Robredo (லெனி ராப்ரெட்டோ). மற்ற 8 வேட்பாளர்களுமே, ஒற்றை இலக்க சதவிகித் வாக்குகளையே பெற்றனர். பாங்பாங் மார்கோஸின் தந்தை சுமார் 20 ஆண்டுகளாக, பிலிப்பைன்ஸை ஆட்சி செய்திருக்கிறார்.
அப்போது நீதிமன்றங்கள், வணிகங்கள், ஊடகங்கள் என அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அவர் சர்வாதிகார ஆட்சி முறையை பின்பற்றினார் எனக் கூறப்படுகிறது. துணை அதிபருக்கான தேர்தலில் லெனி ராப்ரெட்டோவிடம் தோல்வியடைந்த பாங்பாங் மார்கோஸ், அதிபர் தேர்தலில் லெனி ராப்ரெட்டோவை தோற்கடித்து, ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.பாங்பாங் மார்கோஸ்
தென் கொரியா அதிபர் தேர்தல் 2022
தென் கொரியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 20-வது அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதும், அரசியலுக்கு புதுமுகமான, மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் யூல் (Yoon Suk - Yeol) 0.8 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவர் முந்தைய அதிபர் மூன் ஆட்சியில் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்தார் (2019 - 2021). ஜனநாயக கட்சியைச் சேர்ந்த Lee Jae - myung (லீ ஜே - மியுங்) ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர், முன்னாள் ஜியோங்கி (Gyeonggi ) மாகாணத்தின் கவர்னராக பணியாற்றியவர் . யூன் சுக் யூல், 48.6 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார். லீ ஜே - மியுங், பெற்றிருந்த வாக்குகளின் சதவிகிதம் 47.8 ஆகும். இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சம் ஆகும். அதில் 3 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள், இந்த தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர்.
இந்திய ஜனாதிபதி தேர்தல் 2022
இந்தியாவின் முதல் குடிமகன் என்று அறியப்படும் ஜனாதிபதி, பதவிக்கான தேர்தல் ஜூலை 15, 2022-ல் நடைபெற்றது. இந்தியாவின் 14 வது ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 -வுடன் முடிவடைந்த நிலையில், 15-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், பா.ஜ.க கூட்டணி சார்பில் 64 வயது நிரம்பிய திரௌபதி முர்மு போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற்றநிலையில், முடிவுகள் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்பட்டன.
நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு (6,76,803) வெற்றிபெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை (3,80,177) விட 2,96,626 வாக்கு மதிப்புகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். திரௌபதி முர்மு, இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி மற்றும் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.திரௌபதி முர்மு
இலங்கை அரசியல் குழப்பம்:
தீவு தேசமான இலங்கையில், அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக, இந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. மக்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கையிடம், அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கினர். "கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்" என்ற குரல் போராட்டக்காரர்கள் மத்தியில் வலுவாக எழுந்தது. இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தாருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
ஜூலை 9-ம் தேதி, அதிபர் மாளிகைக்குள் பாதுகாப்புகளை மீறி மக்கள் நுழைந்தனர். "தீர்வு கிடைக்கும் வரை மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்" என்று மக்கள் திட்டவட்டமாக கூறியதையடுத்து தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே. அதன்பின் நடந்த அரசியல் குழப்பங்கள், பல கட்ட ஆலோசனைகளின் விளைவாக, ஜூலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
மொத்தம் உள்ள 225 வாக்காளிக்க தகுதி பெற்ற உறுப்பினர்களுள், 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவளித்ததால், அவர் இலங்கையின் அடுத்த பிரதமராக பதவி ஏற்று கொண்டார். மேலும் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரணில் விக்ரமசிங்க, அதிபர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ரணில் விக்ரமசிங்க
பிரிட்டன் பிரதமர் தேர்தல் 2022
கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியானது. கொரோனா காரணமாக நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, ஊழல் குற்றச்சாட்டுகளால் போரிஸ் ஜான்சன் இனி ஆட்சியிலிருக்க தகுதியற்றவர் என்று அமைச்சர்கள் மற்றும் அவரின் சொந்த கட்சியின் ஒருபுறம் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன். அதன் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார் லிஸ் ட்ரஸ் (LIZ TRUSS).
அவரும் அடுத்த ஆறு வார காலங்களில், தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்பு, எம்.பிகள் மற்றும் சொந்த கட்சியினரின் ஆதரவோடு, பிரதமர் பதவியை எட்டிப் பிடித்தார் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரிஷி சுனக். அக்டோபர் 28-ம் தேதி, ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இவர், 2015-ம் எம்.பி யாகவும், 2020-ம் ஆண்டு மோரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் இளமையான பிரதமராவார். ரிஷி சுனக்
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 403. உத்தரப்பிரதேச சட்ட மன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகின. இந்த தேர்தலில், பா.ஜ.க 255-இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், பகுஜன் சமாஜ்(1), காங்கிரஸ் (2) போன்ற கட்சிகள் மிகவும் சொற்பனமான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த முறையும், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்று கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 312 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) ஒன்பது இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் கைகள் சற்றே ஓங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. யோகி ஆதித்யநாத்
கோவா சட்டமன்றத் தேர்தல் 2022
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பா.ஜ.க. காங்கிரஸ் 11 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளையும் கைப்பற்றின. 2012 நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது. மனோகர் பாரிக்கர் முதல்வர் அரியணை ஏறினார். அதன் பின்பு மனோகர் பாரிக்கர், பாதுகாப்புத் துறை அமைச்சராக தேர்வான பின்னர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 17 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், பா.ஜ.க 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.
காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக கோவாவில் உருவெடுத்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்து, ஆட்சி அமைத்தது பாஜக. 2019ல், மனோகர் பாரிக்கரின் (Manohar Parrikar) மறைவுக்குப் பிறகு முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிரமோத் சாவந்த் (Pramod Sawant), தற்போதும் முதல்வர் அரியணையில் தொடர்கிறார். கோவாவை பொருத்தவரை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுமே, சம பலம் பொருந்திய கட்சிகளாகவே பார்க்கப்படுகிறது.கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தல் 2022
அரசியலில் பரபரபுக்கு பஞ்சம் இல்லாத மாநிலம் தான் உத்தரகாண்ட். அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. அதோடு, வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மையை நிருபிக்க 36 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பா.ஜ.க 47 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது, புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 57 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில், தற்போது நடந்த தேர்தலில் 47 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. 2017-ல் நடந்த தேர்தலில், 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் மட்டும் மூன்று முதலமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். 2017-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது, த்ரிவேந்திர சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். உட்கட்சிக்குள் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பையடுத்து திரத் சிங் ராவத் (Tirath Singh Rawat) முதல்வர் அரியணையில் ஏறினார். சலசலப்புகளும், சர்ச்சைகளும் ஓய்வதற்குள் 2021 ஜூன் மாதம் புஸ்கர் சிங் தாமி முதல்வராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து 2022 சட்டசபை தேர்தலிலும், அவர் பெயரே முதல்வர் வேட்பாளருக்கு முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.உத்தரகாண்ட் முதலமைச்சர்
புஷ்கர் சிங் தாமி
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் 2022
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மார்ச் 10-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அமைந்தது. காரணம், காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்த பஞ்சாப் மாநிலத்தை காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு மாற்றாக களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியதே. மொத்தம் இருக்கும் 117 தொகுதிகளில், பெரும்பான்மையை நிருபிக்க 59 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக அக்கட்சியின் மாநில தலைவர் பகவந்த் மான் பொறுப்பேற்றார்.
பல முறை பஞ்சாபில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, 18 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 72 சதவிகித வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகின. 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்திருந்தது. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. ஆம்ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் 2022
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்துக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக பிப்ரவரி 28-ம் தேதி, 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, 22 தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகின. நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 32 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற பிற மாநிலக் கட்சிகள் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மணிப்பூரில், பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. 2017-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. மணிப்பூரின் முதல்வராக பைரன் சிங்கே (Biren Singh) , இந்த முறை பதவியேற்றிருக்கிறார்.
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022
ஆப்பிள் தேசம் என்று அழைக்கப்படும் இமாச்சலப் பிரதேசத்தின் சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியாகின. பெரும்பான்மையை நிருபிக்க 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், 40 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு (Sukhvinder Singh Sukhu) பதவியேற்றுக்கொண்டார். சுக்வீந்தர் சிங் சுகு பதவியேற்பு
பா.ஜ.க 25 தொகுதிகளை பிடித்தது. என்னதான், பா.ஜ.கவை விட காங்கிரஸ் 15 தொகுதிகள் அதிகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 0.9% தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 44 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க ஆட்சி அமைத்திருந்தது. 21 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். இமாச்சலப் பிரதேசத்தில், இதுவரை பா.ஜ.க 4 முறையும், காங்கிரஸ் 9 முறையும் ஆட்சி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின், சட்டமன்றத்துக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது. முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 182 தொகுதிகளுல், 156 தொகுதிகளை கைப்பற்றி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது பா.ஜ.க. பூபேந்திர படேல்
காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளையும் கைப்பற்றின. பூபேந்திர பாய் படேல் (Bhupendrabhai Patel) முதல்வராக பதவி ஏற்றார். பா.ஜ.க 52.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. மோர்பி பாலம் விவகாரம், ஆம் ஆத்மி வருகை முதலியவை குஜராத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட நிலையில், பா.ஜ.க வேட்பாளர் அங்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகின. இந்த தேர்தல் 10 வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில் 75 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ,179 வார்டுகளை கைப்பற்றி, மேயர் பதவியை தட்டிச் சென்றது திமுக. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 96 வார்டுகளை கைப்பற்றியது திமுக. சென்னை, கோவை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.மேயர் பிரியா ராஜன்
வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநகராட்சியின் மேயராக 29 வயது நிரம்பிய பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு பல சீனியர்கள் வரிசையில் நின்ற போதும், கல்பனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரே கோவையின் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.தாரிணி“தமிழக பா.ஜ.க-வின் வளர்ச்சியை பார்த்து வயிறு எரிகிறார்கள்!”
http://dlvr.it/Sg2TCF
Wednesday, 28 December 2022
Home »
» ரீவைண்ட் 2022: பிரிட்டன் ரிஷி; பஞ்சாப் மான்; மேயர் பிரியா... உள்ளூர் டு சர்வதேச தேர்தல்கள்