கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபான பி.எஃப் 7 மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு, உலக நாடுகளில் பரவி வருகிறது. பி.எஃப்.7 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபு, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள், மீண்டும் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளன. அந்த வகையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, புதுவகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் என்று, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசு
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா, பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையும், மங்களூருவில் உள்ள வென்லாக் மருத்துவமனையும் புதுவகை கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய கோவிட்-19 வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர், அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய வழிகாட்டுதலின்படி, கர்நாடகாவில் பார்கள், பப்கள் மற்றும் உணவகங்கள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாடுவதற்கு ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 1 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே இந்த இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பண்டிகைக் காலங்களில் மக்கள் நெரிசலைத் தவிர்க்கும்படி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கொரோனா வார்டு பொது இடங்களில் இனி முகக்கவசம் கட்டாயம்... கொரோனா பரவலைத் தடுக்க கர்நாடகா அரசு அதிரடி முடிவு!
சந்தேகத்திற்கிடமான கொரோனா நோயாளிகள் அனைவரும் பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனையிலும், மங்களூருவில் உள்ள வென்லாக் மருத்துவமனையிலும் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். புதிய வகை கொரோனா தொற்று பாதித்த அனைவருக்கும் இந்த இரண்டு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தயார்நிலை, ஆக்சிஜன் சிலிண்டர்களின் நிலை மற்றும் ஐசியூ வென்டிலேட்டர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட, மாவட்டந்தோறும் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என, கர்நாடக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
http://dlvr.it/Sg7bKt
Friday, 30 December 2022
Home »
» `பி.எஃப் 7 கொரோனா பாதிப்புக்கு இலவச சிகிச்சை!’ - வழிகாட்டலை வெளியிட்ட கர்நாடக அரசு