இந்தோனேஷியாவிலுள்ள செமேரு எரிமலை வெடித்து சிதறியதில் 1.5 கி.மீ தூரத்திற்கு எரிமலை சாம்பலானது காற்றில் உமிழப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவிலுள்ள ஜாவா தீவில் அமைந்திருக்கிறது செமேரு எரிமலை. இன்று அதிகாலையில் செமேரு எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில் அப்பகுதி எங்கும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இரவு 2:46 மணிக்கு வெடிக்கத் தொடங்கிய எரிமலையானது, அங்கு பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. பெரும்புகையுடன் எழும்பிய எரிமலை குழம்பை அங்குள்ளோர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் கரும்புகை சூழ்ந்துள்ளதும் வீடியோக்களில் பதிவாகியுள்ளது.
இதனால் இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு நிறுவனமான BNPB,எரிமலை வெடிப்பு நிகழ்ந்த கிட்டத்தட்ட 5 கி.மீ தூரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அங்குள்ள ஆறுகளில் எரிமலை குழம்புகள் மிதந்துவரும் வாய்ப்புகள் உள்ளதால், ஆற்றுப்படுகைகளிலிருந்து 500 மீட்டர் தள்ளியே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அபாயகரமாக எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில், ஜப்பானின் வானிலை நிறுவனம் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது என NHK செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இருப்பினும் சுனாமி ஆபத்து பற்றிய ஜப்பானின் எச்சரிக்கைக்கு BNPB உடனடியாக பதிலளிக்கவில்லை. உள்ளூர்வாசிகளுக்கு இந்தோனேஷிய அரசு மாஸ்க்குகளை வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், எரிமலையின் நிலையானது தற்போது III இல் இருப்பதாகவும், மிக உயர்ந்த மட்டமான IV -ஐ இன்னும் அடையவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்தோனேஷியாவில் 142 எரிமலைகள் உள்ளது. உலகிலேயே எரிமலைகளுக்கு அருகில் அதிக மக்கள் வசிப்பதும் இந்தோனேஷியாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 10 கி.மீ சுற்றுவட்டாரத்தில் 8.6 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.
http://dlvr.it/SdrtQR
Monday, 5 December 2022
Home »
» இந்தோனேஷியாவில் வெடித்த எரிமலை - மீண்டும் சுனாமிக்கு வாய்ப்பு?