இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட்டுக்கு இன்னும் 6 வாரங்களில் அடுத்த அறுவைச்சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமாக இருப்பவர், ரிஷப் பண்ட். இவர், கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 30ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த ரிஷப்பை, அந்த வழியாகச் சென்ற பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகு டேராடூன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற ரிஷப், மேல் சிகிச்சைக்காக மும்பை அழைத்துச் செல்லப்பட்டார். மும்பையில் அவருக்கு முழங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் ஏற்பட்ட தசைநார் கிழிவுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. ரிஷப்பின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும், இன்னும் நல்ல உடற்தகுதியைப் பெற சில மாதங்கள் ஆகும் என மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ’ரிஷப்புக்கு இன்னும் ஆறு வாரங்களில் மூன்றாவது அறுவைச்சிகிச்சை செய்யப்பட இருக்கிறது’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன்காரணமாக, இந்த ஆண்டில் அவர் பெரும்பகுதியான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்திருந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்துபவர்களில் தற்போது கங்குலியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே, ’டெல்லி அணியின் கேப்டனாய் இருக்கும் ரிஷப்புக்கு பதில் மாற்று வீரரைத் தேர்வு செய்வோம்; சிறப்பாகச் செயல்படுவோம்’ என கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கு பெறுவார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், அதற்குள் அவர் உடற்தகுதி பெற்றுவிடுவாரா என்பதே பல மில்லியன் கேள்வியாக இருக்கிறது.
http://dlvr.it/SgvP5Q
Sunday, 15 January 2023
Home »
» ரிஷப் பண்ட்டுக்கு இன்னும் 6 வாரங்களில் அடுத்த அறுவைச்சிகிச்சை!