கர்நாடக மாநிலம், மைசூர் டி.நரசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களாகச் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. டிசம்பர் மாதம் குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, நாய், ஆட்டுக்குட்டி உள்ளிட்ட உயிரினங்களைக் கொன்றது. வனத்துறை கண்காணிப்பு மேற்கொண்டிருந்த நிலையில் டிசம்பர் 1-ம் தேதி, கெப்பேஹண்டி கிராமத்தைச் சேர்ந்த அரசுக் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி மேகனாவை (20) தாக்கிக் கொன்றது.
அதன் பிறகு கடந்த வாரம், இரண்டு நாள்கள் இடைவெளியில், மேகனா வீட்டிலிருந்து, 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கன்னையாகனஹள்ளியில், சித்தம்மா என்பவரையும், ஹோரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த, 11 வயது சிறுவன் ஜெயந்த் என்பவரையும் தாக்கிக் கொன்றது. நான்கு மாதங்களுக்குள் நான்கு பேர் சிறுத்தை தாக்கி இறந்ததால் வெகுண்டெழுந்த மக்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.கூண்டு வைக்கப்பட்டது.
சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினர் அந்தப் பகுதியில், ஒன்பது இடங்களுக்கு மேல் கூண்டுவைத்து, 110 பணியாளர்களை கண்காணிப்புப் பணியில் களமிறக்கினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறுவன் ஜெயந்த் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே, கூண்டில் சிறுத்தை சிக்கியது.
இதுவரை, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சிறுத்தையின் உடலமைப்பு, உடலிலுள்ள கோடுகள் ஒரே மாதிரியாக இருந்ததால், நால்வரைக் கொன்றது இந்தச் சிறுத்தைதான் எனக் கண்டறியப்பட்டது.
இது குறித்து மைசூர் வனக்கோட்ட வன உயிரின பாதுகாவலர் மாலதி பிரியா நிருபர்களிடம், ‘‘இறந்தவர்களின் உடலில் கிடைத்த சிறுத்தையின் டி.என்.ஏ மற்றும் பிடிபட்ட சிறுத்தையின் டி.என்.ஏ மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு வந்தால்தான் அதே சிறுத்தையா என்பது தெரியவரும். ஆனாலும், உடலமைப்பில் சிறுத்தையின் அனைத்துப் படங்களும், பிடிபட்ட சிறுத்தையுடன் ஒத்துப்போகின்றன. பிடிபட்ட சிறுத்தையை பெங்களூரிலுள்ள பென்னர்கட்டா தேசியப் பூங்காவில் வைத்து பராமரிக்கவிருக்கிறோம். மீதமுள்ள கூண்டுகள் அகற்றப்படவில்லை, மற்ற சிறுத்தைகள் பிடிபடுகின்றனவா எனக் கண்காணிக்கிறோம்’’ என்றார்.சிறுத்தை
முதல்வர் பவசராஜ் பொம்மை நிருபர்களிடம், ‘‘கடுமையாக உழைத்து சிறுத்தையைப் பிடித்த வனத்துறை ஊழியர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. கர்நாடக மாநிலம் முழுவதிலும் சிறுத்தை – மனித மோதலைத் தடுக்க, வனத்துறையினரின் புதிதாக பிரத்யேக கண்காணிப்புக்குழு அமைக்கப்படும். மேலும், இதற்கென பிரத்யேகப் பயிற்சிகள் கொடுக்கப்படுவதுடன், நிதியும் ஒதுக்கப்படும்’’ என்றார்.
சிறுத்தை பிடிபட்டதால் மைசூர் சுற்றுப் பகுதியிலுள்ள மக்கள் நிம்மதியடைந்திருப்பதுடன், சிறுத்தை பிடிபட்டதைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடிவருகின்றனர்.மைசூர்: சிறுத்தை தாக்கி சிறுவன் பலி; 2 நாள்களில் இருவர் பலி – வயதான சிறுத்தையால் தொடரும் மரணங்கள்?
http://dlvr.it/ShcBm4
Sunday, 29 January 2023
Home »
» மைசூர்: நான்கு பேரைக் கொன்ற சிறுத்தை சிக்கியது... சிறுத்தை - மனித மோதலைத் தடுக்க தனிப்படை திட்டம்!