பாகிஸ்தானில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதே சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் போராட்டம் வெடித்து தற்போது புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. எனினும், அதிலிருந்து இலங்கை இன்னும் முழுவதுமாக மீளமுடியவில்லை. தற்போது இதே பிரச்சினையை பாகிஸ்தானும் எதிர்கொண்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, கலைக்கப்பட்ட இம்ராம் கான் ஆட்சிக்குப் பிறகு, பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வானார். அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆவதற்குள்ளேயே, அந்நாடு பொருளாதார சரிவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது.
அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு
அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சந்தைகளை முன்கூட்டியே மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளமும் உள்நாட்டு உற்பத்தியை முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்துள்ளது.
திடீரென உயர்ந்த எரிபொருள் விற்பனை
இந்த நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் அதிகளவிலான சரிவை பதிவு செய்த நிலையில் பெட்ரோல் விலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் நேற்று, அவ்வரசு ’மினி பட்ஜெட்’ ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படிதான், பாகிஸ்தானில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோன்று பொது விற்பனை வரியும் 17 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மினி பட்ஜெட்படி, அந்நாட்டில் பெட்ரோல் விலை 1 லிட்டர், 272 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரேநாளில் 22 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று 1 லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.280 ஆக உயர உள்ளது. பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 12.90 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் அந்நாட்டு மதிப்பில் 202.73 ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது. இந்த புதிய விலை, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருக்கிறது.
15 நாள்களுக்கு முன்னர்தான் அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.35 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அடுத்த சில வாரங்களிலேயே புதிதாக 22 ரூபாய் விலை உயர்வு என்பது அம்மக்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பொருள்களின் விலையும் விண்ணை முட்டியுள்ளது. பால், இறைச்சி போன்ற உணவுப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காத உயர்வை கண்டுள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.210க்கும் ஒரு கிலோ சிக்கன் ரூ.700 - 800க்கும் விற்பனை ஆவதாக தகவல்கள் கூறுகின்றன.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
சர்வதேச நாணய நிதியத்திடமும் (ஐ.எம்.எஃப்.) கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை ஐ.எம்.எஃப்க்கு அனுப்பியது. ஆனால், அதனை ஆய்வுசெய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதேநேரத்தில் முன்னதாக, ”பாகிஸ்தானில் உடனடியாக மின்கட்டண உயர்வை அமல்படுத்தினால் பணப் பற்றாக்குறையை தவிர்க்க முடியும் என ஐ.எம்.எஃப் ஆலோசனை கூறியிருந்தது. இந்தச் சூழலில்தான் அந்நாட்டு அரசு எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததும், எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து மூத்த பொருளாதார நிபுணர் கத்ரீனா எல், ”2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் சராசரியாக 33 சதவீதமாக இருக்கும்” என்று கணித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்
http://dlvr.it/SjYPY0
Friday, 17 February 2023
Home »
» வரலாறு காணாத உச்சம்! பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.272-விலை உயர்வுக்கு இதுதான் காரணம்