“என்னை விஷம் வைத்து கொல்ல முயன்றார்கள்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரரான இம்ரான் நசீர் தெரிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இம்ரான் நசீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”எனக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. என் உணவில் மெர்குரி என்ற திரவத்தை யாரோ சேர்த்திருக்கிறார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக நமது உடல் உறுப்புகளைப் பாதிக்கவைக்கும். இதனால் எலும்பு மூட்டுகளும் தேய்மானம் அடையும். இந்த நோயால் நான் 6 ஆண்டுக்காலம் அவதிப்பட்டு வந்தேன். நான் படுக்கையிலேயே காலம் தள்ளிவிடக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.
என்னுடைய பிரார்த்தனை நிறைவேறியது. தற்போது நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னை பார்க்கும் பலரும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் சாப்பிடுவதில்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது. இந்த விஷம் உடனடியாக வேலை செய்யாது. பல ஆண்டுகள் கழித்துதான் பாதிக்கும். நான் யாருக்கும் தீங்கு செய்ய நினைத்ததில்லை. ஆனால் என்னை ஏன் கொல்ல முயன்றார்கள் என எனக்கு தெரியவில்லை. நான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் மருத்துவச் சிகிச்சைக்காக செலவானது. எனது பெரிய சிகிச்சை ஒன்றுக்கு கொஞ்சம்கூட காசு இல்லை. அப்போது என்னுடைய நிலையை அறிந்த சையது அப்ரிடி எனக்காக 40-50 லட்சம் வரை செலவு செய்தார். எனது மருத்துவருக்கு அப்ரிடி தினமும் பணத்தை அனுப்பிவிடுவார். ‘எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை, என் சகோதரன் பிழைக்க வேண்டும்’ என அவர் மேலாளரிடம் கூறியிருக்கிறார்.
அப்ரிடிக்கு நான் எந்த வகையில் உதவி செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. இந்த பணம் குறித்து அவர் எதுவுமே கேட்டது கிடையாது. என்னுடைய மருத்துவரும் என்னை ஏமாற்றியதில்லை. சிகிச்சைக்குத் தேவையான பணத்தை மட்டுமே வாங்கி இருக்கிறார்” என இம்ரான் நசீர் கூறியிருக்கிறார். தனக்கு சிலர் விஷம் வைத்ததாக இவர் கூறியிருப்பது பாகிஸ்தானில் மட்டுமல்ல, கிரிக்கெட் உலகையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க பேட்டராக களமிறங்கி விளையாடியவர் இமரான் நசீர். 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 2 சதம் மற்றும் 1 அரைசதத்துடன் 427 ரன்களையும், 79 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2 சதம் மற்றும் 9 அரைசதங்களுடன் 1895 ரன்களையும் எடுத்துள்ளார். 1999ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். கடைசியாக 2002ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் விளையாடி இருந்தார். அதுபோல் கடைசியாக 2009ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரின் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க பேட்டராய் களமிறங்கிய இந்த இம்ரான் நசீர் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலைத் தந்தார். என்றாலும், இந்த அறிமுகத் தொடரிலேயே இந்திய அணி மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது. அதுபோல் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த நசீர், ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 121 பந்துகளில் 160 ரன்கள் எடுத்து மலைக்கவைத்தார். இது, அவருடைய அதிகபட்ச ரன்னாகவும் பதிவாகியதுடன், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
http://dlvr.it/SlPDC8
Friday, 24 March 2023
Home »
» “அப்ரிடிதான் எனக்காக 40-50 லட்சம் வரை செலவு செய்தார்”- பாக். முன்னாள் வீரர் நெகிழ்ச்சி