டெல்லியின் இரண்டு புதிய அமைச்சர்களாக சௌரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் ராஜினாமாக்களை டெல்லி அரசு ஏற்றுகொண்டதையடுத்து, அக்கட்சியில் எம்எல்ஏ-க்களாக உள்ள அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க குடியரசு தலைவருக்கு டெல்லி அரசு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையை ஏற்ற குடியரசுத்தலைவர், இருவரையும் அமைச்சர்களாக நியமனம் செய்தார்.
குடியரசு தலைவரின் அந்த ஒப்புதலின் அடிப்படியில் இன்று இருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்றிக்கொள்கின்றனர். இவர்களில் சௌரப் பரத்வாஜ், கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். மணீஷ் சிசோடியாவின் கல்வி குழுவிலும் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட இவர், பாஜகவின் கெளதம் கம்பீரிடம் தோல்வியடைந்தார். பின் 2020 சட்டமன்ற தேர்தலின்போது கிரேட்டர் கைலாஷ்-ன் எம்.எல்.ஏ-வாக தேர்வானார்.
கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ள சௌரப் பரத்வாஜ், டெல்லி ஜல் போர்டின் துணைத் தலைவராக பணியாற்றியவர். ஆம் ஆத்மி அரசாங்கத்தின் முதல் ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் இவர்.
அதிஷி மர்லினா, 2020-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் தொடக்கம் முதலே அக்கட்சியில் இருந்து வருகிறார் இவர். இவர் சிசோடியாவின் கல்வித்துறை ஆலோசராகவும் இருந்து வந்தார்.
டெல்லி சட்டசபை மார்ச் 17ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இருவரும் இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர். டெல்லி அரசும் இந்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியின் இரு அமைச்சர்கள் சிறை சென்றுள்ளது, பட்ஜெட் தாக்கலின்போது சில சலசலப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
தற்போது பதவியேற்கும் இருவருக்கும் எந்த துறைகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அதிஷிக்கு கல்வி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் வழங்கப்படும் என்றும் பரத்வாஜ்க்கு சுகாதார துறை மற்றும் பொதுப்பணித் துறையும் வழங்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://dlvr.it/SkfwNn
Friday, 10 March 2023
Home »
» டெல்லி: சிறைசென்றவர்களுக்கு பதிலாக இரு புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு...!