சட்ட விரோதமாக போடப்பட்ட மீன் வலையில் சிக்கிய ஆட்டை காப்பாற்ற முயற்சித்த இருவர் பரிதாப உயிரிழந்த சோக சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை அடுத்த கருத்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அதே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அருண், சிவதாஸ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரும் ஏரி கரையில் வீடு கட்டிக்கொண்டு சட்டவிரோதமாக மீன்பிடி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
மீன்வலையில் சிக்கி ஆடு! காப்பாற்றச் சென்றபோது சிக்கிய பரிதாபம்
நேற்று பிற்பகல் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதற்காக ஏரியில் மீன் வலையை கிழக்கு மேற்காக விரித்துள்ளனர். அச்சமயம் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரின் ஆடு மீன் வலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. இதனை அறிந்த திருவேங்கடம், தனது ஆட்டை காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கி மீன் வலையிலிருந்து ஆட்டை காப்பாற்ற முயற்சித்த பொழுது எதிர்பாராத விதமாக திருவேங்கடம் மீன் வலையில் சிக்கிக் கொண்டார். பின்னர் தன்னை காப்பாறுமாறு கூச்சலிட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த செங்கல் சூலை தொழிலாளி!
ஏரிக்கு அருகாமையில் செங்கல் சூலையில் பணி செய்திருந்த ரமேஷ் என்பவர் கூச்சல் சத்தத்தை கேட்டு உடனடியாக ஏரி பகுதிக்கு விரைந்து வந்துள்ளார். அப்பொழுது திருவேங்கடம் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருவேங்கடத்தை காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கி அவர் முயற்சித்துள்ளார். அப்பொழுது காப்பாற்றச் சென்ற ரமேஷும் திருவேங்கடமும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆட்டை மீட்கப் போய் இருவர் உயிரிழந்த பரிதாபம்
இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் நேற்று இரவு திருவேங்கடத்தின் உடலை மீட்ட நிலையில் இன்று அதிகாலை செங்கல் சூளை கூலித் தொழிலாளி ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் மீன் வலையை விரித்த மூன்று பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேச்சலுக்குச் சென்ற ஆடு மீன் வலையில் சிக்கியதை காப்பாற்ற முயன்ற இருவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
http://dlvr.it/SlHCbl
Wednesday, 22 March 2023
Home »
» தி.மலை: உயிருக்கு போராடிய ஆட்டை காப்பாற்றச் சென்று தங்கள் உயிரையே இழந்த இருவர்!