“'முதல் மரியாதை' போன்ற ஒரு படைப்பை நான் நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநர் பாரதிராஜா இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ், தீபன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையிலும் கவிஞர் வைரமுத்து வரிகளிலும் 1985ஆம் ஆண்டு வெளியானது 'முதல் மரியாதை' திரைப்படம். இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் இப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 12 திரையரங்குகளில் முதல் மரியாதை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனைக் காண படத்தின் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு நேற்று சென்றார்.
படத்தை காணும் முன் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லை என்றால் இந்த பாரதிராஜா இல்லை. சிவாஜி போட்ட பிச்சை தான், இதுவரையில் நான் நடிக்க காரணம். இதுபோன்ற ஒரு படைப்பை நானே நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது. படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் ராதா, சத்யராஜ், தீபன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் கண்ணன், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இந்த படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்” என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து பாரதிராஜாவிடம் ‘முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகை ராதா கதாபாத்திரம் பரிசல் ஓட்டும் பெண்ணாக இருப்பார். அதே வேலை செய்யும் கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வனில் பூங்குழலி இருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த இயக்குநர் பாரதிராஜா, “இரண்டு கதாபாத்திரங்களும் வேறு வேறு. இரண்டையும் கலந்து பார்ப்பது தவறு. ஒரு கலைஞனின் படைப்பு மிகவும் முக்கியமானது. நான் இயக்குநர் மணிரத்னம் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன்'' என்றார்.
http://dlvr.it/SlXN5Y
Monday, 27 March 2023
Home »
» “சிவாஜி கணேசன் இல்லைன்னா நான் இல்ல” - ‘முதல் மரியாதை’ ரீ-ரிலீஸில் பாரதிராஜா நெகிழ்ச்சி