கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன மனஷா மையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா சமாஜ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இடஒதுக்கீடு பிரிக்கப்பட்ட விதத்தில், தங்களின் பங்கு குறைக்கப்பட்டதாக பஞ்சாரா சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தின் கொடியை ஏற்றினர். இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளி, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், போலீஸ் சூப்பிரண்டு ஜி மிதுன் குமன், எடியூரப்பா வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
பஞ்சாரா சமூகத்தினர் பட்டியல் பழங்குடி சமூகத்தில் உள் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான ஏ.ஜே.சதாசிவ குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த மாநில அரசின் முடிவுக்கு எதிராக பஞ்சாரா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம்தான் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. ”அரசின் இந்த நடவடிக்கை பஞ்சரா சமூகத்துக்கு அநீதி இழைக்கும். ஆகவே இந்த பரிந்துரையை உடனடியாக மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்” எனவும் பஞ்சாரா சமூக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “இதன்மூலம் பாஜக, அனைத்து சமூக மக்களையும் பிளவுபடுத்த முயல்கிறது” என தெரிவித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்
http://dlvr.it/SlbK2b
Tuesday, 28 March 2023
Home »
» எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்குதல்.. வீட்டில் இருந்த பாஜக கொடி அகற்றம் - பின்னணி என்ன?