மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் சர்திகி தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இது மம்தா பானர்ஜிக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ``சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் இடைத்தேர்தலில் பாஜக-வுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருந்தன. இப்போது பொருத்தமற்ற கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ், எப்படி பாஜக-வை எதிர்த்து போட்டியிடும். இடதுசாரிக் கட்சிகள் எப்படி பாஜக-வை எதிர்த்து போட்டியிடும். பாஜக-வுக்கு எதிரானவர்கள் என்று எப்படி காங்கிரஸும் இடதுசாரிகளும் கூறிக்கொள்ள முடியும்?
இடைத்தேர்தலில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் மதவாதத்தைப் பயன்படுத்தின. பாஜக வெளிப்படையாகப் பயன்படுத்தியது. காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் பாஜக-வைவிட அதிக அளவில் மதவாதத்தைப் பயன்படுத்தின. சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளின் பேச்சைக் கேட்கக் கூடாது. பாஜக-வுடன் இணைந்து செயல்படுபவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதற்கு இது ஒரு பாடம். 2024-ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களுடன்தான் கூட்டணி வைக்கும்.
வேறு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். மக்கள் ஆதரவுடன் போட்டியிடுவோம். பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். பாஜக, காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை எதிர்த்து போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் போதும்” என்று தெரிவித்தார். 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மம்தா பானர்ஜி ஒன்று சேர்க்க முயன்றார். ஆனால் அது முடியாமல்போனது. மேற்கு வங்கத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றது.மம்தா பானர்ஜி
இதையடுத்து இருப்பதையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக மேற்கு வங்கத்தில் மட்டுமே மம்தா பானர்ஜி அதிக கவனம் செலுத்திவருகிறார். கோவாவில் சில காங்கிரஸ் தலைவர்களைத் தனது கட்சிக்கு இழுத்து, அங்கு தனது கட்சியை விரிவுபடுத்த மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை. இதே போன்று வடகிழக்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு அங்கு தனது கட்சியை மம்தா பானர்ஜி வளர்க்க முயன்றார். ஆனால் தற்போது வந்திருக்கும் தேர்தல் முடிவுகள் மம்தா பானர்ஜிக்கு எதிராகவே அமைந்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகளை கூட்டணி சேர்த்து பிரதமராகிவிடலாம் என்று மம்தா பானர்ஜி கணக்கு போட்டுப் பார்த்தார். ஆனால், அந்தப் பதவிக்கு ஏற்கெனவே நிதிஷ் குமார், அர்விந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் ஆகியோரும் போட்டியில் இருக்கின்றனர். தற்போது தனித்துப்போட்டியிடுவேன் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருப்பதால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SkHhSl
Friday, 3 March 2023
Home »
» மேற்குவங்கம்: இடைத்தேர்தலில் காங்கிரஸ் கொடுத்த ஷாக்... மம்தா அதிரடியால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி!