தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை வெளிநாட்டு நிதி பெற்றுக்கொண்டு தூண்டிவிடப்பட்டது என்பது உள்ளிட்ட பல சர்ச்சையான கருத்துகளை ஆளுநர் ரவி நேற்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில், ஆளுநர் ரவி நேற்று பேசியது தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
குரூப்-1 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ-மாணவியருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை ராஜ் பவனிலுள்ள தர்பார் அரங்கில் உரையாற்றினார். அப்போது, மாணவ, மாணவியருக்கு பல்வேறு ஆலோசனைகளை ஆளுநர் வழங்கினார். தேர்வுக்குத் தயாராவது, படிப்பதைப் புரிந்து படிப்பது, ஆங்கிலத்தில் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முயல்வது, தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது, ஆளுமையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.ஆளுநர் ஆர்.என் ரவி
இந்திய காவல் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, பிறகு மத்திய அரசுப் பணியைத் தேர்வுசெய்து பணியாற்றியது குறித்தும், அரசின் பல்வேறு துறைகளில் சவால் மிகுந்த இடங்களில் பணியாற்றிய அனுபவங்களில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றிய அனுபவங்களை ஆளுநர் குறிப்பிட்டார்.
"சவாலான மாநிலங்களில் பணியாற்றிய எனக்கு தற்போதுதான் அமைதியான சூழ்நிலை நிலவும், கலாசாரம், பாரம்பர்ய பெருமைகொண்ட மக்கள் வாழும் தமிழ்நாட்டில் வசிக்கவும் சேவையாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. தனிப்பட்ட விஷயத்தில் இது எனக்குக் கிடைத்த வளர்ச்சி என்றும் சொல்லலாம். தொன்மை வாய்ந்த மொழியான தமிழை கற்றுக்கொண்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு ஆளுநர் ரவி பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி, 'ஆளுநரின் பணி' குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு அவர், "ஆளுநரின் உச்சப்பட்ச பொறுப்பே அரசியலைமைப்பை பாதுகாப்பது. மாநிலமோ, மத்திய அரசோ இரண்டு அமைப்புகளுமே அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். அரசியலமைப்பில் ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகள் குறித்த சட்டங்கள், மத்திய அரசின் அதிகாரம் என்ன, மாநில அரசு என்னென்ன சட்டங்கள் இயற்றலாம், ஒத்திசைவு பட்டியலிலுள்ள விஷயத்தில் மத்திய அரசு சட்டமியற்றலாம், மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்காவிட்டாலும் கூட மாநில அரசு சட்டமியற்றலாம். ஆனால், அது மத்திய அரசின் சட்டத்துக்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் போன்றவை தெளிவாக இருக்கின்றன.ஆன்லைன் ரம்மி எதிர்ப்பு மசோதா
சட்டமன்றத்தில் ஒரு கட்சிக்கு முழு மெஜாரிட்டி இருக்கலாம். அதை வைத்து அதில் எந்த மசோதவையும் நிறைவேற்றலாம். ஆனால், அதை சட்டமாக்கும் இடத்தில்தான் மாநில ஆளுநரின் பங்கு வருகிறது. ஆளுநரின் பணி என்ன... அந்த இயற்றப்பட்ட சட்டம் மாநில அரசின் அதிகாரத்தைத் தாண்டிப் போகாமல் உள்ளதா என்பதைக் கண்காணிப்பது. அது எல்லை தாண்டிருந்தால் ஆளுநரின் பொறுப்பு அந்த இடத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது. மாநில சட்டமன்றம், மாநில சட்ட மேலவை போன்றவை குறித்து குறிப்பிட்டிருக்கும் அரசியலமைப்பில், மாநில சட்டமன்றம் என்றாலே அதில் ஆளுநரும் அங்கம்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் 200-ன்படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒன்று மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அது சரியாக இருந்தால், அதற்கு ஆளுநர் ஓப்புதல் தர வேண்டும். இரண்டாவது, சரியான மசோதா இல்லையென்றால் அந்த மசோதாவை நிறுத்திவைப்பது. நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத்தான் அர்த்தம். இதை உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியிருக்கிறது. நேரடியாக நிராகரிப்பதாக இல்லாமல் நிறுத்திவைப்பது என்று அது அழைக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பாக, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கும் முடிவை ஆளுநர் எடுக்கலாம். அதற்குக் காரணம் மத்திய அரசு இயற்றியிருக்கும் சட்டத்துக்கு இணையாக ஒரு மசோதா தாக்கல் செய்யும் பட்சத்தில் அது குறித்த தமது முடிவை எடுக்காமல் அதை இறுதிசெய்வது குடியரசுத் தலைவர் என்பதால் மசோதாவை அவரது பார்வைக்கு ஆளுநர் அனுப்பிவைக்கிறார்.ஆளுநர் ரவி
குடியரசுத் தலைவர் அத்தகைய மசோதாமீது முடிவெடுக்க இரண்டு வித வாய்ப்புகளைப் பயன்படுத்துவார். ஒன்று மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் அல்லது அதை நிறுத்திவைப்பார். ஓர் ஆளுநரால் இரண்டுவித சந்தர்ப்பங்களில் மசோதாவை நிறுத்திவைக்க முடியாது. ஒன்று பண மசோதாவை அவரால் நிறுத்திவைக்க முடியாது. இரண்டாவது ஒரு மசோதாவின்மீது ஆளுநருக்கு சந்தேகம் வந்து அதன்மீது விளக்கம் கேட்டு மசோதாவைத் திருப்பி அனுப்பினால், அதை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநரால் மறுக்க முடியாது.
அரசியல்ரீதியாக மத்தியில் ஒரு கட்சி, மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் அரசியல்ரீதியாக செயல்படுதிறார் என்கிற பார்வை இருக்கும். ஆனால், அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசுத் தலைவர்தான். ஆளுநர் தனக்குக் கொடுத்திருக்கும் கடமையை ஆற்றும்போது எந்தக் குழப்பமும் வராது" எனத் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு, 'வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம்' குறித்து ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர், "வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடையாகப் பெறுகிறது. அது ஒருமுறை என்றால் பிரச்னை இல்லை. தொடர்ச்சியாக அத்தகைய நன்கொடை வருமானால் அது வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் 4-ன்கீழ் வரும். இந்தச் சட்டம் மூலம் அனைத்து வெளிநாட்டு நன்கொடைகளும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் வரும். இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள், சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டிருக்கிறது.அணுமின் நிலையம்
உதாரணமாக தென் தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டத்துக்கான வேலையைத் தொடங்கும்போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காலநிலை மாற்ற தாக்கம், அணுஉலை வெடிக்கலாம், மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி பட்டினியோடு நீண்டகாலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வுசெய்தபோது போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது.
வடகிழக்கு மாநிலங்களில் போலி நிறுவங்களை வெளிநாடுகளில் ஆரம்பித்து ரூ.200 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் வந்தன. அவை மதமாற்றத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய செயல்பாடுகளை எப்படிஅனுமதிக்க முடியும்... இது போன்ற தேசநலனை பாதிக்கும் விவகாரங்களில் வெளிநாட்டு நன்கொடை பயன்படுத்துவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நீண்ட ஆண்டுகள் இந்தச் சட்டம் பெயரளவிலும், சில இடங்களில் ஊழல் காரணமாக நிறைவேற்றப்படாமலும் இருந்தது.மாணவர்களுடன் ஆளுநர்
கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் அமைக்கும் திட்டம், பெங்களூரிலிருந்து செயல்படும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற மிகப்பெரிய மனித உரிமைகள் அமைப்பின் இடையூறு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக தடைபட்டது. இந்தியாவின் பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம், அரசு அனைத்தும் சரியான திட்டம், எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லியும் திட்டம் நிறைவேற்றப்பட முடியவில்லை. இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அந்த அமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் அந்நிய நிதி பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெற்றது தெரியவந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது கவலைக்குரிய விஷயம். ஏன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடந்தது... இந்திய தேவையில் 40% தாமிரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது. அதை மூடிவிட்டார்கள்.ஸ்டெர்லைட் ஆலை
இதனால் இந்தியாவின் 40% தாமிர தேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. தாமிரம் இந்தியாவின் மின்னணு உற்பத்திக்கு முக்தியத் தேவை. இதை முடக்கும்வேலையில் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதியைப் பெற்றுவந்தது தெரியவந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அந்நிய நிதி மூலம் செயல்படும் இத்தகைய நிதி உதவிகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அது தற்போது இயலவில்லை. ஆனால், போகப் போக அது சரியாகும். மக்கள் தங்கள் உரிமைக்காக அரசுக்கு எதிராகப் போராடலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கிறது.மாணவர்களுடன் ஆளுநர்
அதே நேரம் தேச நலனைப் பாதுகாக்க அரசு தன்னுடைய பணியைச் செய்துதான் ஆக வேண்டும். வேண்டுமென்றே தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வதும், வளர்ச்சியைத் தடுக்கமுயல்வது மிகவும் தவறு. பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பு, இந்திய சகோதரத்துவ அமைப்பு என்று ஓர் அமைப்பை ஆரம்பித்துக்கொண்டு வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து சிரியா, ஆப்கானிஸ்தான், இரானுக்கு சென்று ஐஎஸ் அமைப்பில் சேருபவர்களில் 90% பேர் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் மூலமாகவே செல்கின்றனர்" எனப் பேசினார். ஆளுநரின் ஸ்டெர்லைட் போராட்டம், சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்த பேச்சுகளுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. 'இந்தியா ரிஷிகளாலும், உபநிடதங்களாலும் உருவானது; தமிழ்நாடு ஆன்மிகம் நிறைந்த இடம்' - ஆளுநர் ரவி
http://dlvr.it/Sm6t4r
Friday, 7 April 2023
Home »
» சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை... சர்ச்சையை ஏற்படுத்திய உரை! - என்னதான் பேசினார் ஆளுநர் ரவி?