2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்... எங்களை யாரும் அசைக்க முடியாது என்று பா.ஜ.க தலைவர்கள் பேசிவருகிறார்கள். மேலும், பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியில் தொடர வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்களில் ஒரு தரப்பினர் மத்தியில் கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் அனைத்து எதிர்க் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சி பெரியளவுக்கு பலன் தரவில்லை. சந்திரசேகர ராவைப் பொறுத்தளவில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்ற எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தார். இதே நிலைப்பாடுதான், ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோருக்கும்.
தற்போது, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் களமிறங்கிய பிறகு, சூழல் மாறியிருக்கிறது. ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததும், அதையடுத்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதும், ‘காங்கிரஸ் வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டிருந்த கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற நிலையிலும்கூட, ‘பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்’ என்கிறார் மம்தா பானர்ஜி.மம்தா பானர்ஜி
அண்மையில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை அழைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் ராகுல் காந்தியையும் டெல்லியில் சந்தித்தார் நிதிஷ் குமார். அதன் அடுத்தகட்டமாக, நிதிஷ்குமாரும் தேஜஸ்வியும் நேற்று முந்தினம் (ஏப்ரல் 24) கொல்கத்தாவுக்குச் சென்று மம்தா பானர்ஜியைச் சந்தித்தார்கள். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த, தனிப்பட்ட முறையில் எந்த ஈகோவும் எனக்கு கிடையாது. நிதிஷ் குமாரைப் போலவே நானும் எதிர்க் கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன்” என்றார்.
முக்கியமாக, “பா.ஜ.க-வை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே இலக்கு. அனைத்து எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை பீகாரில் நடத்த வேண்டும் என்று நிதிஷ் குமாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்தத் திசையில் பயணம் மேற்கொள்வது என்பது முடிவுசெய்யப்படும்” என்று சொன்ன மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்படும்” என்றார். ராகுல் காந்தி
இதுவரையில், காங்கிரஸ் கட்சி தொடர்பான மம்தா பானர்ஜியின் நிலைப்பாடு மாறி மாறியே இருந்திருக்கிறது. 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்தார் மம்தா பானர்ஜி. 45 நிமிட சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “பெகாசஸ் பற்றியும் கொரோனா பெருந்தொற்று சூழல் பற்றியும் விவாதித்தோம். எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை பற்றியும் விவாதித்தோம். பா.ஜ.க-வைத் தேற்கடிக்க அனைவரும் ஒன்றுசேர வேண்டும்” என்றார். தீவிரம் காட்டும் அண்ணாமலை - பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் இனி என்ன?!
அந்த நிலைப்பாட்டை, அடுத்த சில நாட்களிலேயே அவர் மாற்றிக்கொண்டு, காங்கிரஸை எதிர்க்க ஆரம்பித்தார். தற்போது, அவரது நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது. காங்கிரஸையும் உள்ளடக்கிய கூட்டணி பற்றி இப்போது பேசுகிறார். இந்த நிலைப்பாட்டில், வரும் நாடாளுமன்றத் தேர்தல்வரை அவர் உறுதியாக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதவ்
நிதிஷ் குமாரும் தேஜஸ்வியும் கொல்கத்தாவில் மம்தாவைச் சந்தித்துவிட்டு, அப்படியே லக்னோவுக்குச் சென்று அகிலேஷ் யாதவைச் சந்தித்தனர். மம்தாவைப் போலவே காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பவர் அகிலேஷ். ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமைப் பயணம் உ.பி-க்கு சென்றபோது, நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்குமாறு அகிலேஷுக்கு கடிதம் எழுதியிருந்தார் ராகுல் காந்தி. ஆனால், நேரில் செல்லாமல் வாழ்த்து மட்டும் தெரிவித்திருந்தார் அகிலேஷ். அதுவே சிறிய மாற்றம்தான். அதன் பிறகு, ராகுல் காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி பதவி பறிக்கப்பட்டபோது, கண்டனக்குரல் எழுப்பினார் அகிலேஷ்.
தற்போது, தன்னைச் சந்தித்து நிதிஷ் குமாரிடம், “பா.ஜ.க அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகளும் தொழிலாளர்களும் பல பிரச்னைகளை அனுபவித்துவருகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. ஆகவே, பா.ஜ.க-வை அதிகாரத்திலிருந்து அகற்றுவதில் தங்களுடன் இணைந்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார் அகிலேஷ். மம்தா பானர்ஜியும், அகிலேஷும் அரசியல் ரீதியாக இணக்கமாக இருந்துவரும் நிலையில், மம்தாவைப் பின்பற்றி கூட்டணி முடிவை அகிலேஷ் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் தேசிய அரசியல் நோக்கர்கள்.
http://dlvr.it/Sn50Tb
Wednesday, 26 April 2023
Home »
» பாஜகவுக்கு எதிராக மம்தா - நிதிஷ் `திடீர்' தீவிரம்... காங்கிரஸை ஏற்கும் எதிர்க்கட்சிகள்?!