கர்நாடகத்தில் மே 10-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் ‘ஸ்டார்’ பேச்சாளர்கள், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘ரோடு ஷோ’ சென்று, வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இன்று, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாண்டியா மாவட்டத்தில் ‘ரோடு ஷோ’ நடத்தினார். முன்னதாக, ஒக்கலிகா சமூக மக்களின் வாக்குகளைக் கவர, ஒக்கலிகா மடங்களுக்குச் சென்று மடாதிபதிகளைச் சந்தித்து, அவர்களின் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
‘மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு!’
நிகழ்ச்சிகளில் பேசிய யோகி ஆதித்யநாத், ‘‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, வளர்ச்சியை நோக்கி நகர்ந்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில், ஐந்தாண்டுத் திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்துவதற்குள், அடுத்த ஐந்தாண்டு திட்டம் வந்துவிடும். இதனால், ஐந்தாண்டு திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், பா.ஜ.க ஆட்சியிலோ, நாங்கள் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடத்தும்போதே, திட்டத்தின் தொடக்கவிழாவைத் தீர்மானித்துச் செயல்படுத்திவருகிறோம். மோடி தலைமையிலான பா.ஜ.க விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறது.யோகி ஆதித்யநாத்
நம் நாடு ஏற்கெனவே மதங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறது. நாங்கள் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளைத் தடைசெய்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சியினர், மதங்களைத் திருப்திப்படுத்த, தனிப்பட்ட மதத்துக்கு பிரத்தியேக இட ஒதுக்கீடு வழங்கியிருக்கின்றனர். மதங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புக்கு எதிரானது. இப்படித்தான், மதங்களைப் பிரித்து காங்கிரஸார் அரசியல் செய்கின்றனர்.
பாதுகாப்பான மற்றும் வளமான இந்தியாவுக்காக, கேப்டன் நரேந்திர மோடியின் வலுவான அணிக்கு கர்நாடகா மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். கர்நாடகாவில் வளர்ச்சியைக் கொடுத்திருக்கும், ‘டபுள் இன்ஜின்’ பா.ஜ.க அரசுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
கர்நாடகத்தில், இஸ்லாமிய மக்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய முயன்ற பா.ஜ.க அரசின் முடிவை, உச்ச நீதிமன்றம் நேற்று தற்காலிகமாக தடுத்து நிறுத்தியிருக்கிறது. இப்படியான நிலையில், ‘இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது. இதை ரத்துசெய்ய வேண்டும்’ என்ற கோணத்தில், நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இன்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருக்கின்றனர்.இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து... தேர்தல் விளையாட்டில் கர்நாடக பா.ஜ.க!
http://dlvr.it/Sn84c3
Thursday, 27 April 2023
Home »
» `தனிப்பட்ட மதத்துக்கு இட ஒதுக்கீடு, அரசியலமைப்புக்கு எதிரானது’– கர்நாடகாவில் யோகி ஆதித்யநாத் பேச்சு