மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) வைரவிழாக் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பேசிய பிரதமர், ”சி.பி.ஐ போன்ற திறன் மிகுந்த அமைப்புகள் இன்றி இந்தியா முன்னேற முடியாது. பல்வேறு ஊழல் மற்றும் மோசடி வழக்குகளை திறம்பட கையாண்டு வருகிறது சி.பி,ஐ. இதன் முக்கியப் பொறுப்பு ஊழலற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதுதான். 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஊழல் செய்வதில் போட்டி நிலவியது. பெரிய ஊழல்கள் செய்தவர்கள் அச்சமின்றி பொதுவெளியில் சுதந்திரமாக இருந்தனர். 2014-க்குப் பிறகு ஊழல், கறுப்புப் பணம் ஆகியவற்றுக்கு எதிரான செயல்பாட்டை நாம் மேற்கொண்டிருக்கிறோம். குறிப்பாக நீதியை நிலைநாட்டும் அமைப்பாக திகழ்கிறது சி,பி,ஐ” என்றார். சி.பி.ஐ
சி.பி.ஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவரும் இவ்வேளையில், பிரதமர் மோடி சி.பி.ஐ நீதியை நிலைநாட்டுகிறது, சுதந்திரத்துடன் செயல்படுகிறது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்புகள் விவகாரம் குறித்து நம்முடன் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ”சிபிஐ குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துகள் அடிப்படையற்றது. மோடியின் ஆட்சி இந்திய வரலாற்றிலேயே ஊழல் மலிந்த ஒன்று. நீதியை நிலைநாட்டும் அமைப்பு சிபிஐ எனில், நரேந்திர மோடியின் நண்பர் அதானியை முதலில் சிபிஐ விசாரித்திருக்கும். அதானிக்கு உடந்தையாக இருக்கும் பிரதமரையும் விசாரித்திருக்கும். நீதியை நிலைநாட்ட சிபிஐ முயன்றிருந்தால் இன்று பல பாஜகவினர் சிறையில்தான் இருந்திருப்பார்கள். மாறாகக் கட்சிப் பொறுப்பிலும் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்திருக்க மாட்டார்கள். ஜோதிமணி
காங்கிரஸ் ஆட்சியில் வலுவாக இருந்த சிபிஐ மோடியின் அலங்கோல ஆட்சியில் ஊழல் செய்பவர்களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் இருக்கிறது. பாஜகவால் ஊழல்வாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பலர், பாஜகவில் இணைந்ததும் சிபிஐ அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவது இல்லையே. இதுதான் நீதியை நிலைநாட்டுவதா? `சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவும் பாஜக..!' - 14 எதிர்க்கட்சிகளின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
ஊழல்வாதிகளை விசாரிப்பதை விட்டுவிட்டு ஊழலை அம்பலப்படுத்துவோரிடம் விசாரணை மேற்கொள்கிறது சிபிஐ. பிபிசி நிறுவனத்தில் சோதனை, எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு என பாஜகவை எதிர்த்துப் பேசுபவர்களை அடக்கி ஒடுக்க பாஜக பயன்படுத்தும் ஆயுதம் சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள். பாஜக ஆட்சியில் ஏதேனும் ஒரு தன்னாட்சி அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் இன்று அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. ஊழல்வாதிகளுக்குப் பக்க பலமாக இருந்து அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளுக்கு எந்தவித சுந்தரத்தைத் தருவதில்லை.” என்றார் காட்டமாக. நாராயணன் திருப்பதி
நம்முடன் பேசிய பாஜக மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நீதியை நிலைநாட்டும் அமைப்பாக சிபிஐ செயல்படுகிறது எனப் பிரதமர் தெரிவித்திருக்கும் கருத்து நூறு சதவீதம் உண்மை. பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து ஊழல் குற்றம் புரிந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ வலுவாக இருந்தது எனக் காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள், ஆம் காங்கிரஸ் ஆட்சியில் அவர்களது கட்சிக்கு ஆதரவாக, பக்கபலமாக சிபிஐ அமைப்பை வைத்திருந்தார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ கூண்டுக்கிளியாக இருந்தது என நீதிமன்றங்களே சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 9 வருட பாஜக ஆட்சியில் பாஜகவினர் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்களோடு எழவில்லை என்ற போது எதற்கு பாஜகவினரை விசாரிக்க வேண்டும்? ரஃபேல் விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் இருந்தது. ஆனால் இதில் எந்தவித முறைகேடுகளும் இல்லையென நீதிமன்றங்கள் உறுதிசெய்துவிட்டன. பாஜகவில் இணைந்ததால் அவர் மீது வழக்கு திரும்பப்பெறப்பட்டது என எந்த சான்றும் இல்லையே.
காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜகவினர் உள்ளிட்டோரின் மீது எந்த முகாந்திரமும் இன்றி அரசியல் பழிவாங்கல் நோக்கில் வழக்குப் போட்டது, தகுந்த விசாரணைக்குப் பிறகு அவற்றில் குற்றமற்றவர் என பாஜகவினர் நிரூபிப்பதை சிபிஐ ஆதரவு எனச் சொல்வதில் நியாயமில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் சிபிஐ அமைப்பு அரசுக்குத் துணை நின்றதே தவிர, பாஜக ஆட்சியில் எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி முழு சுதந்திரத்துடன் நீதியை நிலைநாட்டும் பணியைச் சிறப்பாகச் செய்கிறது சிபிஐ. இது ஒரு தன்னாட்சி அமைப்பு, காங்கிரஸ்காரர்களுக்குச் சந்தேகமோ குற்றச்சாட்டோ இருந்தால் அவர்கள் நீதிமன்றம் செல்லலாமே” என்றார்.ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அளவுகோள் என்பது தன்னாட்சி அமைப்புகளில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதே.
சி.பி.ஐ மட்டுமின்றி இதர புலனாய்வு அமைப்புகள் மற்றும் தேர்தல் ஆணையங்கள் எந்த வித அழுத்தங்களுமின்றி செயல்படுவது மிக முக்கியமானது. மத்திய அரசு அதனை உறுதி செய்திட வேண்டும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.மிரட்டும் பா.ஜ.க! - எதிர்க்கட்சியினர்மீது ஏவப்படும் விசாரணை அமைப்புகள்!
http://dlvr.it/Sm9Pz9
Saturday, 8 April 2023
Home »
» சி.பி.ஐ: பாராட்டும் பிரதமர் மோடி... கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! - பின்னணி என்ன?!