முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த நிலையில், `இரண்டாண்டுகள் தி.மு.க ஆட்சியின் வேதனைகள்' எனத் தலைப்பிட்டு, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் என்று கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கிறார். அதில், ``சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த தி.மு.க ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக `திராவிட மாடல்' என்ற போர்வையில், மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா! வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம்.முதல்வர் ஸ்டாலின்
தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள்படும் அல்லல்களில் முக்கியமானவற்றை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 'மாதம் ஒருமுறை மின் கட்டணம்' நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை மக்கள்மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி 18,000 ரூபாய் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க.
கொரோனா நோய்த் தாக்கத்திலிருந்து மக்கள் மீளும்வரை சொத்துவரி உயர்த்தப்படமாட்டாது என்பது தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சொத்துவரியை பல மடங்கு உயர்த்தியதோடு, ஆண்டுக்காண்டு சொத்து வரியை உயர்த்திக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது தி.மு.க. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. சொத்து வரியைத் தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு. ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்பது தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் இதை நிறைவேற்றிய தி.மு.க அரசு, இதை ஈடுசெய்யும் வகையில், ஒரு சில மாதங்களிலேயே ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அளவுக்கு உயர்த்தியது.மின்சாரக் கட்டணம்
இதே போன்று ஆவின் பொருள்களான தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் போன்றவற்றின் விலையையும் உயர்த்தியிருக்கிறது. ஆவின் வெண்ணெய்க்கு இன்று மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. ஆவின் பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதில்லை. ஆவின் பால் விநியோகம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பாலுக்கான கொள்முதல் உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் ஆவின் நிறுவனத்தின் கதி அதோகதி. ‘நகைக் கடன் தள்ளுபடி' என்ற வாக்குறுதி தி.மு.க-வால் அளிக்கப்பட்டது. ‘நகைக் கடன் வாங்கிக்கொள்ளுங்கள், தள்ளுபடி செய்யப்படும்' என மேடைக்கு மேடை தி.மு.க-வினரால் பேசப்பட்டது. ஆனால், விண்ணப்பித்தவர்களில் 25 விழுக்காட்டினருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 75 விழுக்காட்டு மக்கள் கடனாளியாக ஆனதுதான் மிச்சம்.
கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி தி.மு.க-வால் அளிக்கப்பட்டது. இது பற்றிய பேச்சே இல்லை. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என்று மேடைக்கு மேடை தி.மு.க-வினரால் முழங்கப்பட்டது. இந்த வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டது. அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க-வால் அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ‘இது சாத்தியமில்லை' என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.ஓ.பி.எஸ்
அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு, ஊதிய உயர்வு குறித்து 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க-வால் அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. இதற்காகக் குரல் கொடுப்பவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க-வால் அளிக்கப்பட்டது. இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் என்று சொல்லிவிட்டு, அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்திருக்கின்றனர்.
நியாயவிலைக் கடைகள் மூலம் கூடுதல் சர்க்கரை, உளுத்தம் பருப்பு விநியோகம் என்ற வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலை 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி குறித்து பேச்சுமூச்சே இல்லை. மாறாக, ஏற்கெனவே முதியோர் உதவித்தொகை பெற்று வந்த பல பயனாளிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர். எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு தி.மு.க எண்ணற்ற துரோகங்களை தமிழ்நாட்டுக்கு இழைத்திருக்கிறது. அதில் முக்கிய 15 துரோகங்கள் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன.மணல் கடத்தல்
இது தவிர, கொரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள், மருத்துவர்களைப் பணியிலிருந்து நீக்கியது; அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது; தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்துசெய்தது; அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தை ரத்துசெய்தது; அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஆறு மாதங்களுக்கு தள்ளிப்போடுவதை வாடிக்கையாகக்கொண்டிருப்பது; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பல்வேறு சலுகைகளை முடக்கியது; ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்காதது; பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை மூலம் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் அங்கு பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தனியார் நிறுவனத்தின் கீழ் மாற்றுதல்...
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளையும் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளுதல் எனப் பல மக்கள் விரோத நடவடிக்கைகளை தி.மு.க அரசு எடுத்துவருகிறது. இதற்கெல்லாம் காரணம் கேட்டால் 'கடன்', ‘நிதிப் பற்றாக்குறை' எனச் சொல்லும் தி.மு.க அரசு, கடலில் பேனா திட்டத்தை அமல்படுத்தத் துடிப்பது, சுயநலத்தின் உச்சக்கட்டம். பொது நலத் திட்டத்தை நிறைவேற்ற பணமில்லாத நிலையில் தன்னலத் திட்டம் எதற்கு என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜெயலலிதா வகுத்துத் தந்த அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாடு செல்கிறதா என்றால் அதுவும் இல்லை. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.பேனா நினைவுச்சின்னம்
அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. பத்திரிகையைப் படித்தாலே பாலியல் வன்கொடுமைகள்தான் அதிகம் இருக்கின்றன. தி.மு.க-வினரும், தி.மு.க சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்களை மிரட்டியது, ராணுவ வீரரை தி.மு.க கவுன்சிலர் கொலைசெய்தது, நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும், அங்குள்ள வாகனங்களையும் அமைச்சரின் ஆதரவாளர்களே தாக்கியது, அமைச்சர்கள் பொதுமக்களை அடிப்பது, கிண்டல் செய்வது என பல கேலிக்கூத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்றுவருகின்றன.
வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்கேற்ப சட்டத்தை காக்க வேண்டியவர்களே சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். மணல் கடத்தலும், ரேஷன் பொருள்கள் கடத்தலும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வன்முறைக் களமாக தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது. பூரண மதுவிலக்கு என்று சொல்லிவிட்டு, பார்கள் மூலமும், தானியங்கி இயந்திரங்கள் மூலமும் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.முதல்வர் ஸ்டாலின்
ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மொத்தத்தில், தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க 'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள். அவர்களுக்கு `வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது?' என்ற வித்தியாசம் தெரியும். தமிழர்கள் தங்களுடைய மனக் குமுறலை தி.மு.க அரசுக்கு வெளிப்படுத்தும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.``ஓட்டு போடாதவர்கள் வருந்தும் அளவுக்கு நல்லாட்சியைக் கொடுத்துவருகிறோம்!" - முதல்வர் ஸ்டாலின்
http://dlvr.it/SnhYtY
Monday, 8 May 2023
Home »
» திமுக: "2 ஆண்டுகள், 15 துரோகங்கள்; வெண்ணெய் எது.. சுண்ணாம்பு எதுவென தமிழக மக்கள் அறிவார்கள்"- ஓபிஎஸ்